முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று காலை சந்தித்துக் கொண்டுள்ளனர். அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராகவும் முதலைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்தவர் ஓபிஎஸ். 2 முறை முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்

எனினும் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட முரணால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனித்து விடப்பட்டிருக்கும் ஓபிஎஸ், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இதற்கிடையே என்டிஏ கூட்டணியில் அண்மையில் அதிமுக இணைந்தது. இதற்கும் அடுத்தபடியாக, மதுரை வந்த அமித் ஷா- ஓபிஎஸ்ஸைச் சந்தித்துப் பேசவில்லை. அதேபோல, அரியலூர், தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியும் ஓபிஎஸ்ஸைக் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்ஸைச் சேர்க்கக்கூடாது என்பதில், எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இந்த நிலையில், தனித்து விடப்பட்டிருந்த ஓபிஎஸ், என்ன செய்வது என்ன குழப்பத்தில் உள்ளார்.

வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின்

இதற்கிடையே இதயத் துடிப்பு மாறுபாடு காரணமாக சிகிச்சையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது உடல்நிலை தேறி, வீடு திரும்பி உள்ளார்.

திடீர் சந்திப்பு அல்ல, திட்டமிட்ட சந்திப்பு

இன்று காலையில் வழக்கம்போல முதல்வர் ஸ்டாலின், அடையாறு பூங்காவில் நடைப் பயிற்சி சென்றுள்ளார். அதே அடையாறு பூங்காவுக்கு ஓ.பி.எஸ்ஸும் வாக்கிங் வந்துள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்டபோது, நலம் விசாரித்துக் கொண்டுள்ளனர். எனினும் இது திடீர் சந்திப்பு அல்ல, திட்டமிட்ட சந்திப்பு என்று அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். மீண்டும் அதிகாரப்பூர்வ சந்திப்பு இன்று மாலை நடக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல் களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று காலை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.