தமிழகத்தில் யார் எதிர்கட்சி என்ற விவகாரத்தில் அதிமுக -பாஜக தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த சில தினங்களுக்கு முன் ராயப்பேட்டை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன் பேசியது பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது பாஜக  அதிமுகவின் கூட்டணி கட்சிதான் என்றாலும், அக்கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவுக்கு- திராவிட கொள்கைகளுக்கு- தமிழக நலனுக்கு நல்லதல்ல என்று கூறினார். 




தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர நினைப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக எதிர்க்கட்சி என்ற மாயை பிம்பம் உருவாக்கப்படுகிறது. இதனை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும் என பொன்னையன் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தில் பாஜக வளர்கிறது. ஆனால் பொன்னையன் வளரவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் பேசியதாக விமர்சித்திருந்தார். 


இதேபோல ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காத ஆதங்கத்தில் பொன்னையன் பேசுகிறார். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார் என பாஜக மாநிலத் துணை தலைவர் வி.பி.துரைசாமி பதிலடி கொடுத்திருந்தார். மேலும் காயத்ரி ரகுராம், நாராயண் திருப்பதி பாஜகவைச் சேர்ந்த பலரும் பொன்னையன் கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனால் பொன்னையன் தமிழகத்துக்கு ஏற்றவாறு பாஜக தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியின் தான் அப்படி தெரிவித்ததாக விளக்கம் கொடுத்திருந்தார். 


இதனிடையே இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் எதிர்கட்சி விவகாரத்தில் பொன்னையன் கருத்து குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டப்பேரவை யில் எப்படி செயல்படுகிறது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். பாஜக குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியது அவரது சொந்த கருத்து என தெரிவித்தார். 


மேலும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்த வி.பி.துரைசாமி எந்த கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரைப் போல கட்சி மாறி செல்பவர்கள்  நாங்கள் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக - பாஜக தலைவர்களின் கருத்து மோதலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண..