டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செல்ல உள்ள நிலையில், அவர் டாஸ்மாக் முறைகேடு புகாரிலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற சமாதானம் பேசவே அங்கு செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள டாஸ்மாக் விசாரணை

டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து தாமாக முன்வந்து டாஸ்மாக் தொடர்பான இடங்களில் திடீர் சோதனைகளை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிரடியாக அறிவித்தது. அதோடு, விசாரணையையும் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது தவறு என்றும், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனை செய்ததில் தவறில்லை எனக் கூறி, விசாரணைக்கும் தடை விதிக்க மறுத்தோடு, தொடர்ந்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, விசாரணையை தொடர்ந்துவரும் அமலாக்கத்துறை, கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விசாகனின் வீட்டில் சோதனை நடத்தினர். அதன் பிறகு, அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, விசாகனின் வீட்டின் அருகே, கிழந்த நிலையில் சில ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். அதில், ரத்தீஷ் என்பவரிடம், டாஸ்மாக் நிர்வாக விஷயங்கள் குறித்து விசாகன் பேசிய வாட்ஸ்அப் சாட்டுகளின் ஸ்க்ரீன்ஷாட் சிக்கியது.

இதைத் தொடர்ந்து ரத்தீஷை விசாரிக்க அமலாக்கத்துறை அவரது வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் பூட்டு போட்டுள்ளனர். அந்த ரத்தீஷ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என தகவல் வெளியானதையடுத்து, இந்த விஷயம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ரத்தீஷ் சிக்கினால், உதயநிதிக்கு ஆபத்து என கூறப்படுகிறது.

இந்நிலையில், ரத்தீஷ் விவகாரத்தை கையிலெடுத்த அதிமுக, யார் அந்த தம்பி? என கேள்வி எழுப்பி வருகிறது. இந்நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தள்ளார்.

“படுத்தே விட்டாரய்யா... எல்லாம் “தம்பி“ படுத்தும் பாடு - இபிஎஸ்

இது குறித்த தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்காக ஒரு தேவை என்றதும் செல்கிறார் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். அன்று 2ஜி-க்காக அப்பா டெல்லி சென்றார் என்றும், இன்று டாஸ்மாக்... தியாகி... தம்பி... என குறிப்பிட்டு வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் “தம்பி“ படுத்தும் பாடு என்று பதிவிட்டுள்ளார்.