ECI Vote Theft: வாக்கு திருட்டு விவகாரத்தில் அதிகாரிகளை போல அல்லாமல், அரசியல்வாதிகளை போன்று பேசுவதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

வாக்கு திருட்டு விவகாரம்

பாஜக உடன் சேர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே ஆய்வு செய்து, மோசடி நடந்ததற்கான ஆதாரங்கள் என பல தரவுகளையும் வெளியிட்டுள்ளார். ஒரே வீட்டில் 80-க்கும் மேற்பட்டோர் வசிப்பதாக குறிப்பிடப்பட்டு இருப்பது, வீடுகளுக்கு 00 என எண்களை வழங்குவது, IDJK, SHISIS என வாக்காளர்களுக்கு பெயர்களை வழங்கியிருப்பது மற்றும் ஒரே நபருக்கு பல அடையாள அட்டைகள் ஆகியவை குற்றச்சாட்டுகளாக உள்ளன. இதுதொடர்பாக கடந்த ஞாயிறன்று தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.ஆனால், அது அந்த அமைப்பிற்கு எதிராகவே முடிவடைந்து உள்ளது.

”அரசியல்வாதிகள் ஆன அதிகாரிகள்”

வழக்கமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரசியல்வாதிகள் தான் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார்கள். ஆனால், அதிகாரிகள் புள்ளி விவரங்களை குறிப்பிட்டு பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, அரசியல் தலைவரின் செய்தியாளர் சந்திப்பை போன்றே இருந்ததாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, “வீடு இல்லாதவர்களுக்கு வாக்குரிமை பறிபோக கூடாது என்றே 00 என்ற எண்ணை வழங்கினோம், தாய்மார்களின் வீடியோக்களை எதிர்க்கட்சிகள் கேட்கலாமா? தனியுரிமை பாதிக்கப்படாதா? ஒருவர் ஆறு அடையாள அட்டை வைத்திருந்தாலும் அவர் ஒரு இடத்தில் தானே வாக்களித்துள்ளார், தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்பது அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது” என்றெல்லாம் பேசியது பொதுமக்கள் கூட விரும்பவில்லை என்பது சமூக வலைதள சூழல்கள் காட்டுகின்றன. இதனிடையே, செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட பல முக்கிய கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்காமலேயே கடந்து சென்றுள்ளது.

தேர்தல் ஆணையம் பதில் தராத 10 கேள்விகள்:

  • இத்தகைய பெரிய அளவிலான சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு முன்பாக, அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்காதது ஏன்?
  • தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்ற சொந்த விதியையே தேர்தல் ஆணையம் பின்பற்றாதது ஏன்?
  • வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியிலும் போதிய முன்னேற்பாடுகள் ஏதுமின்றி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரம் என்ன?
  • இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது எத்தனை புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர்?
  • உரிய ஆவணங்கள் இன்றி எத்தனை கணக்கீட்டு படிவங்கள் சமர்பிக்கப்பட்டன
  • எத்தனை பேரின் மனுக்கள் பரிசீலனைக்கு உட்பட்டது அல்ல என அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது? அதற்கான காரணம் என்ன?
  • பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் போது எத்தனை வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்?
  • ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலின் வடிவம் ஏன் டிஜிட்டலில் இருந்து ஆவண முறைக்கு மாற்றப்பட்டது?
  • ராகுல் காந்தியிடம் பிரமாண பத்திரம் கேட்ட தேர்தல் ஆணையம், ஸ்டாலினின் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறிய அனுராக் தாக்கூரிடம் பிரமாண பத்திரம் கேட்காதது ஏன்?
  • அனுராக் தாக்கூர் சொன்ன குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படாதது ஏன்?

என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையர்கள், “Next Question" என சொல்லி கடந்து சென்றனர்.

”பாயிண்ட் வரட்டும் பாஸ்”

கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தேர்தல் ஆணையர்கள் கடந்து சென்றது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அதேநேரம், மொத்தமாக கேள்விகளை கேட்டபிறகு தேர்தல் ஆணையர்கள் பதிலளித்ததாக சிலர் விளக்கமளித்து வருகின்றனர். ஆனால், அப்படி கூட மேற்குறிப்பிடப்பட்ட 10 கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்தாக தெரியவில்லை என்பதே எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நெட்டிசன்களின் விமர்சனமாகவும் உள்ளது. பாஜகவிடம் இருந்து இந்த கேள்விகளுக்கான ஸ்க்ரிப்ட் எழுதி கொடுக்கப்படவில்லையா? என எதிர்க்கட்சியினரும், மேலிடத்திலிருந்து பாயிண்ட்ஸ் வந்தா தான் பேசுவீங்களா SIR? நெட்டிசன்களும் தேர்தல் ஆணையத்தை கிண்டலடித்து வருகின்றனர்.