’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக உறுப்பினர் சேர்க்கையில் ஆளே சேர்க்காமல் மற்றவர்களைவிட அதிகமாக உறுப்பினர்களை சேர்த்துவிட்டேன் என்று, திமுக தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார் ராமநாதபுர மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம். இது முதல்வரின் கவனத்திற்கு சென்ற பின்னர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே அழைத்து பாராட்டியிருக்கிறார்.

இது என சீட்டிங்? - முகம் சிவந்த முதல்வர்

ஆனால், அவர் அனுப்பிய ரிப்போர்ட் எல்லாம் பம்மாத்து வேலை என்பதையும் அவர் சேர்த்ததாக கூறப்படும் உறுப்பினர்கள் யாரும் உண்மையில் திமுகவில் சேரவே இல்லை என்பதையும் கண்டறிந்திருக்கிறது திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் ஒரு நிறுவனம். அதை ஒரு ரிப்போர்டாக முதல்வருக்கு அளிக்க, கடும் கோபமடைந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது என்ன சீட்டிங் வேலை ? என்று ஆவேசமான முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தின்போது, காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை வறுத்தெடுத்துவிட்டதாக சொல்கின்றனர் உடன்பிறப்புகள்.

உறுப்பினர் சேர்க்கையில் நடந்தது என்ன.?

உண்மையிலேயே உறுப்பினர் சேர்க்கையில் என்ன செய்தார் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ? என்பதை அவரது மாவட்டத்தில் விசாரித்தோம். அதில், ஓரணியில் தமிழ்நாடு என்ற அறிவிப்பு வந்ததும் உறுப்பினர் சேர்ப்பதற்கென தனி அலுவலகம் போட்டு அமோகமாக தொடங்கியிருக்கிறார். ஆனால், அவர் நினைத்தது மாதிரி சுலபமாக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள முடியவில்லை. பெயருக்கு சில வீட்டிற்கு மட்டும் சென்றுவிட்டு அலுவலகத்தில் வைத்தே உறுப்பினர் சேர்க்கையை நடத்தி முடித்திருக்கிறார் காதர்பாட்சா.  திமுகவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கூட இன்னும் திமுக உறுப்பினர்களாக இல்லாத சூழலில், அவர்களை கூட இந்த உறுப்பினர் சேர்க்கையில் இணைக்க முற்படாமல், செல்போன் எண்களை மட்டும் பெற்று அந்த எண்களை வைத்து காதர்பாட்சா டீம் அவர்களாக ஒரு பெயரை போட்டு கணக்கு காட்டியிருக்கின்றனர். ஒரு செல்போன் எண்ணை வைத்து பத்து பேர் வரை சேர்த்துள்ளதாக கணக்கு காட்டியிருக்கின்ரனர். ஆனால், தனியார் நிறுவனம் செய்த ஆய்வில், காதர்பாட்சா முத்துராமலிங்கம் கொடுத்த லிஸ்டில் உள்ள செல்போன் எண்ணுக்கு அழைத்தால் அதனை எடுப்பது அதில் குறிப்பிடாத பெயர் உள்ள நபராக இருந்திருக்கிறார். அதே நேரத்தில் இந்துக்கள் பயன்படுத்தும் எண்ணில் இசுலாமியர்களின் பெயர்களை எழுதியது, இசுலாமியர்கள் பயன்படுத்தும் செல்போன் எண்களில் இந்துக்களின் பெயர்களை எழுதியது உள்ளிட்ட அனைத்து தகிடுதத்தங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுக்கடுக்கான புகார்கள்

ஏற்கனவே, காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீது ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட மாவட்ட நிர்வாகிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திமுக தலைமைக்கு அனுப்பியுள்ள நிலையில், அவர் உறுப்பினர் சேர்க்கையிலும் திமுக தலைமையை ஏமாற்ற முயற்சித்ததால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் பலரும் காதர்பாட்சா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தை அமைப்பு ரீதியாக இரண்டாக பிரிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், தன்னுடைய ஆதரவாளரும் ராமேஸ்வரம் நகராட்சி தலைவருமாக இருக்கும் நாசர்கானை இன்னொரு மாவட்டச் செயலாளராக ஆக்கும் முயற்சியில் காதர்பாட்சா இறங்கியிருப்பதாகவும், அதற்காகவே பரமக்குடி நகராட்சிக்கு கொடுக்கவேண்டிய விருதை ராமேஸ்வரம் நாசர்கானுக்கு அமைச்சர் கே.என்.நேரு மூலம் பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். நாசர்கான் மற்றும் அவரது மகன் மீதும் ஏகப்பட்ட புகார்கள் தலைமைக்கு சென்றிருக்கிறது. அதே நேரத்தில் சட்டவிரோத குற்றச்சாட்டுகளும் அவர்கள் மீது உள்ளது என்கின்றனர் ராமநாதபுரம் உ.பிக்கள்.

சீட் கிடைக்குமா.?

ஒவ்வொரு தொகுதியாக யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று திமுக தலைமை தனியார் நிறுவனம் மூலம் சர்வே எடுத்து வரும் நிலையில், மீண்டும் ராமநாதரத்தில் காதர்பாட்சாவிற்கு சீட் கொடுத்தால், திமுக நிர்வாகிகளே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் கட்சிக்காரர்களே அவருக்கு வாக்களிக்க தயங்குவார்கள் எனவும் கள நிலவரம் இருப்பதாக ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தனக்கு ஆதரவாக இருக்கும் திமுகவின் சில முக்கிய தலைகளை பிடித்து தனக்கு எதிரான நடவடிக்கையை அவ்வப்போது தடுத்து வந்தார் காதர்பாட்சா முத்துராமலிங்கம். இந்த முறை அவர்களே காதர்பாட்சாவிற்கு ஆதரவாக செயல்பட தயங்கி வருகின்றனர்.

காதர்பாட்சா தரப்பு சொல்வது என்ன ?

இது குறித்து காதர்பாட்சா முத்துராமலிங்கம் தரப்பில் பேசியபோது, கட்சிக்காக தொடர்ந்து இரவு, பகல் பாராது உழைப்பவர் காதர் பாட்சா என்றும் அவரை பிடிக்காத சிலர்தான் அவருக்கு எதிரான புகார்களை எழுப்புகின்றனர் எனவும் சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.