தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்
நடந்து முடிந்த ஹரியானா , ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அனைத்து கருத்து கணிப்புகளும் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெறும் என்று கூறியிருந்தது.
அதே போல, நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காலை 10 மணி வரை காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதற்கு பிறகு, தேர்தல் ஆணைய இணைய தளத்தில் 2 மணி நேரத்திற்கு எந்த தகவலும் வெளி வராமல் முடங்கிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு. ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியிருந்தார். ஆனால், பிற்பகலில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளிவந்தன.
இந்த முடிவுகள் ஏற்கனவே நம்பகத் தன்மையை இழந்த தேர்தல் ஆணையத்தின் மீது மீண்டும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை, வெளிவந்த முடிவுகளின்படி மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜ.க. 48 இடங்களையும், 39.9 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சி 39.3 சதவிகித வாக்குகளை பெற்று 37 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஏறத்தாழ சம அளவில் வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் தோல்வியடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு , பெருவாரியாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பதோடு , 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படும் என்ற எதிர்பார்ப்பை சிதைக்கும் வகையில் இந்த முடிவுகள் அமைந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக தில்லி மாநில எல்லையில் நடைபெற்ற விவசாய பெருங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தை நசுக்கிய ஹரியானா மாநில பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையில் , மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திரண்டு வந்த நிலையில் தேர்தல் தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அமைந்திருக்கிறது.
தேர்தல் தீர்ப்பை பொறுத்தவரை காங்கிரஸ் தோற்கவில்லை. ஆனால், தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பாகும். தேர்தல் ஆணையத்தின் மீது அகில இந்திய காங்கிரஸ் தலைமை உரிய ஆதாரங்களோடு முறையிட இருக்கிறது.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது என்பது பல்வேறு முறைகேடுகளின் அடிப்படையிலும், தேர்தல் ஆணையத்தின் பாரபட்ச போக்கினாலும் தான். ஆகவே, காங்கிரஸ் கட்சியின் வெற்றி தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 37 சதவிகித வாக்குகளை பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி 49 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 25.6 சதவிகித வாக்குகளை பெற்ற பா.ஜ.க. 29 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. எனவே ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளையும், ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் தேர்தல் ஆணையம் ஏதோவொரு வகையில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்றால், காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றத் தான் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த தேர்தல்களை வெளிப்படைத்தன்மையோடு நேர்மையாக, வாக்காளர்களின் நம்பிக்கையை பெறுகிற வகையில் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. அதனால் தான் அரசமைப்புச் சட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு சுயேட்சையான அதிகாரங்களும், நியமன முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக, ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இத்தகைய கேடு விளைவிக்கிற போக்கு, இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எச்சரிக்க விரும்புகிறேன்.