பாஜகவுக்கு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி வட இந்தியாவில் பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு வீடியோ செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.


மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது போலவும் அவருக்கு மருத்துவர்கள் என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பிப் போய் மயக்க மருந்து அளிப்பது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.




அந்த நபர் திரும்ப திரும்ப எஸ் பார் சாசோ பார் என்று இந்தியில் எதையோ குறிப்பிடுகிறார். நிலைத் தகவலில், “பாஜகவுக்கு 400 சீட்டு என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிய நபர். பாஜகவுக்கு 400 சீட்டு என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிய நபர்; மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதே போன்று மாலை மலர் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தியும் வெளியாகி இருந்தது.


உண்மை அறிவோம்:


வீடியோ எடுக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும் போதே யாரோ ரீல்ஸ்-க்காக எடுத்த வீடியோ போல் தெரிகிறது. திரைக்கதை எழுதி நடித்த (ஸ்கிரிப்டட்) வீடியோவை உண்மை என்று நம்பி செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.


வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் உள்ளிட்ட பல தேடு தளங்களிலும் தேடிப் பார்த்தோம். நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆப் கி பார் 400, மன நல பாதிப்பு என்பது உள்ளிட்ட சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். இந்த வார்த்தைகளை இந்தியில் மொழிபெயர்த்துத் தேடினோம். அப்போது நமக்கு ஃபேஸ்புக்கில் வெளியான லைவ் வீடியோ ஒன்று கிடைத்தது. 




அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டது போன்று நடித்த நபர் இருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருபவது போல் நடித்தவரும் அருகில் இருந்தார். ஆப் கி பார் 400 ரீல் நடித்தவர் என்பது போன்று அந்த வீடியோவின் குறிப்பு பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இது ரீல்ஸ்-ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் ஓரளவுக்கு உண்மையானது. 


வீடியோவில் இந்தியில் பேசியதால், நம்முடைய இந்தி குழுவினரின் உதவியை நாடினோம். அந்த வீடியோவை பார்த்துவிட்டு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி மனநலம் பாதிக்கப்பட்டதாக வீடியோவில் நடித்தவர் இவர்தான். இந்த வீடியோ எப்படி எடுக்கப்பட்டது என்று அவர் அந்த பேட்டியில் கூறுகிறார்.


அந்த நபரின் பெயர் டாக்டர் ராஜிந்தர் தாப்பா (Dr Rajinder Thappa) என்றும் இது இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தனர். மேலும், வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகம் வெளியிட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியிடப்படும் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தனர்.




அவர் பெயரைப் பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் தேடினோம். அப்போது அவரது ஃபேஸ்புக் பக்கம் நமக்கு கிடைத்தது. அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மருத்துவர் என்பது தெரியவந்தது. மேலும், இவர் ஸ்கிரிப்ட் செய்து எடுத்து வெளியிட்ட சில வீடியோக்களையும் காண முடிந்தது. 400 சீட் தொடர்பாக அவர் முதலில் வெளியிட்ட வீடியோ மற்றும் அதன் இரண்டாவது பாகம் என அனைத்தையும் காண முடிந்தது. முதலில் வெளியான வீடியோவில் அது ஸ்கிரிப்டட் வீடியோ என்று எந்த குறிப்பும் இல்லாமல் வெளியிட்டிருந்தார். இரண்டாவது பாகத்தில் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.


 



மேலும், ஆம் ஆத்மி கட்சி தொப்பி அணிந்து இவர் வெளியிட்டிருந்த வீடியோவையும் காண முடிந்தது. தொடர்ந்து நம்முடைய தேடுதலில் காஷ்மீர் வேறு சில ஊடகங்களுக்கும் அவர்கள் அளித்த பேட்டி நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையில்லை என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.


முடிவு:


பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்று கூறி கூறி பாஜக தொண்டர் ஒருவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ திரைக்கதை எழுதி எடுக்கப்பட்ட நாடக வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம்.


எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Fact Crescendo என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.