சேலம் மாவட்டம் வீரபாண்டி கொப்பம் ஏரியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் “காவிரிக்கரை மற்றும் நீர் நிலைகளின் கரையோரங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி” தொடங்கி வைக்கப்பட்டது.


பின்னர் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, வேளாண்துறையில் பனை விதைகள் அனைத்திடங்களிலும் நடப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்து பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பனை மரம் மூலம் கிடைக்கும் ஒவ்வொன்றும் மக்களுக்கு பயன்படும் என்பதாலும், நிலத்தடி நீரை அதிகம் எடுத்துக் கொள்ளாது என்ற காரணத்தினாலும் மக்களுக்கு அனைத்து பயன்களும் கிடைக்கும் என்பதால் தமிழக முதல்வர் துவங்கி வைத்துள்ளார். மரம் வளர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்துள்ளது. மரம் வளர்த்தால். மரம் நம்மளை வளர்க்கும் என்பதால் இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளது. செங்கல் சூளைகளுக்கு பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றார்.



இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று, என்ன கொண்டு வந்தார் என்று கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று நாளிலிருந்து, ஒவ்வொரு நாளும் ஆயிரம் கோடி முதல் 2 ஆயிரம் கோடி வரை ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அப்பொழுது ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் போது எத்தனை நபர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்பது குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். நியாயம் இருந்தால் எதிர்க்கட்சி கட்சியினர் விமர்சனம் செய்யலாம் என்றும் கூறினார். முதல்வர் வெளிநாட்டிற்கு செல்லும்போது ஒப்பந்தம் குறித்து முழு விவரங்கள் விவரித்து வருகிறார். ஆனால் வெள்ளை அறிக்கை, வெள்ளை அறிக்கை என்று கேட்டால் என்ன தருவது என்றும் கூறினார்.



இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் கோட்டத்திலிருந்து ரூபாய் 5 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 15 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் கே. என்.நேரு தொடங்கி வைத்தார். சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவின்போது வீரமா பாளையம் மற்றும் தாரமங்கலம் பணிமனைகளில் ரூபாய் 8 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். சேலம் கோட்டத்தில் தற்சமயம் இயங்கி வரும் புறநகர் வழித்தட பேருந்துகளுக்கு பதிலாக புதிய BS-6 ரக பேருந்துகள் மேட்டூரில் இருந்து சென்னைக்கு 2, சேலத்திலிருந்து திருச்சிக்கு 4, கோயம்புத்தூருக்கு 1, பெங்களூருக்கு 8 என மொத்தம் 15 புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.


https://tamil.abplive.com/news/tamil-nadu/miladi-nabi-2024-tamil-nadu-holiday-date-changed-to-17th-september-tn-govt-200182/amp


இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், போக்குவரத்து துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.