விழுப்புரம்: கர்நாடாகவில் காங்கிரசும், பாஜகவும் எலியும் பூனையுமாக இருந்தாலும் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதென இரு கட்சிகளும் உறுதியாக இருப்பதாகவும் காவிரி நீர் விவகாரத்தில் நீர் தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக முதலமைச்சர் தொடராமல் ஏன் செயல்படுகிறார் எனவும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் அதிமுக தொடங்கப்பட்டு 52 வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், தமிழகத்தில் 32 ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் கட்சியாக அதிமுக உள்ளதாகவும் பல்வேறு துரோகங்களையும், பிளவுகளையும் சந்தித்து கட்சியின் சின்னம் முடக்கினாலும் மீண்டெடுக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார். 


மத்தியிலும் மாநிலத்திலும் இருப்பவர்கள் அதிமுகவை அழிக்க நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டெடுக்கப்பட்டு செயல்பட்டு இருக்கிறது. திமுகவை போன்று குடும்ப கட்சி அதிமுக அல்ல என்றும் யார் வேண்டுமானாலும் இக்கட்சியில் பதவிக்கு வரலாம் என கூறினார். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று குடும்ப உறுப்பினர்கள் தான் பதவிக்கு வருகிறார்கள் திமுக ஒரு கட்சியே அல்ல அது கந்து கட்டி கம்பெனி தமிழகத்தை கொள்ளை அடித்து கொண்டு இருக்கின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடும் படும் கட்சியாக அதிமுக உள்ளது. 


ஆளுங்கட்சியாக உள்ளபோதே திமுககாரர்களை பார்க்க முடியவில்லை யார் துணைவேந்தராகவும் பதிவாளராகவும் நியமிக்கபடுகிறார்கள் என்பது உயர்கல்வி துறை அமைச்சராக உள்ள பொன்முடிக்கே தெரியாது, திமுக ஆட்சியில் என்ன நடக்குறது என்று அமைச்சர்களுக்கே தெரியாது அமைச்சர்கள் ரப்பர் ஸ்டாம்பாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார். 


திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கூட்டு பாலியல் அதிகரித்துள்ளதாகவும் தென் மாவட்டங்களில் ஜாதி கலவரம் அதிகரித்துள்ளதாகவும் பள்ளி வளகத்தில் கஞ்சா போதை மாத்திரைகள் கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தின் உரிமை மறுக்கப்படுவதாகவும் கர்நாடாகவில் காங்கிரசும், பாஜகவும் எலியும் பூனையுமாக இருந்தாலும் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதென இரு கட்சிகளும் உறுதியாக இருக்கின்றனர். காவிரி நீர் விவகாரத்தில் நீர் தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக முதலமைச்சர் தொடராமல் செயல்படுகிறார். டெல்டாவில் தண்ணீர் இல்லாமல் விவசாயி உயிரிழந்தால் குறைந்த தொகையை அறிவிக்கும் தமிழக முதல்வர் கள்ளச்சாராயத்தினால் உயிரிழப்பவர்களுக்கு பத்து லட்சம் அறிவிக்கும் அரசாக தான் உள்ளதாக தெரிவித்தார். 


செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் ஸ்டாலின் கர்நாடாக முதலமைச்சர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடாமல் தயங்குகிறார் என கேள்வி எழுப்பினார். மத்தியில் ஆளும் பாஜக கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் தமிழகத்திற்கு நல்லது செய்யமாட்டார்கள், தமிழகத்தில் தமிழ் தமிழ் என்று பேசிவிட்டு அங்கு இந்தியை வளர்ப்பார்கள், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யாரென்று திமுக கூறினால் அடுத்த நொடியே நாங்கள் பிரதமர் வேட்பாளர் யாரென்று கூறுவோம் யார் பிரதமராக வந்தாலும் தமிழகத்திற்கு துரோகம் தான் இழைத்துள்ளார்கள். எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.


மத்தியில் யார் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை தமிழக மக்களின் நலன் மட்டுமே முக்கியம்.சனாதனத்தில் கூறப்படுகிறது போல் குலத்தொழிலை ஒழிப்போம் என கூறும் உதயநிதி குடும்பத்தார் குலத்தொழிலாக கடைபிடித்து வருகின்றனர். ஒருபக்கம் சனாதனம் பேசும் ஸ்டாலினும், உதயநிதியும் அவரது குடும்பத்தை சார்ந்த துர்கா ஸ்டாலின் கோவிலில் 101 தேங்காய் உடைப்பதை உங்களால் கட்டுபடுத்த முடியவில்லை என கூறினார்.