கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் கடந்த டிசம்பர் 3,4 ம் தேதி அதிகனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்தது. ஆனால் திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். பருவமழை வரும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், பாதிப்புகளை குறைத்திருக்கலாம்.
அதிமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் பேரிடர் காலத்தில் அம்மா உணவகத்தில் உணவு தயாரித்து உணவு வழங்கினோம். தென்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அங்கேயும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. திடீரென ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விட்டனர். 2 இலட்சம் கன அடி நீர் தாமிரபரணியில் வந்ததாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும் துயர சம்பவம் நடந்தது. தொழிற்சாலை பொருட்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாம்.
நான் செல்லும் முன்பு யாரும் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்க்கவில்லை. வக்கீல் ஓடையை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் திமுகவினர் கமிஷனுக்காக ஆசைப்பட்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கஜா, தானே, வர்தா ஆகிய புயல்கள் வந்தன. அதனால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்ததால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியது. அப்போது புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க திமுகவும், அதன் கூட்டணி கட்சிகள் ஒன்று கூட குரல் கொடுக்கவில்லை. இப்போது மட்டும் தேர்தலை மையமாக வைத்து திமுக கூட்டணி கட்சிகள் குரல் தருகின்றனர்.
முதலமைச்சர் மத்தியில் நிதி தர வேண்டும் என கேட்கிறார். மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில அரசு நிதியில் இருந்து தர வேண்டும். மாநில அரசு மத்திய அரசையும், மத்திய அரசு மாநில அரசையும் குறை சொல்வது கவலையளிக்கிறது. பொறுப்பை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும். ஆர்.எஸ்.பாரதிக்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. நாங்கள் மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுகிறோம். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றதும் புலம்புகின்றனர். குறை சொல்வது மட்டும்தான் அவர்கள் வேலை. கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு தகுந்தபடி தான் அமையும்” என்றார்
ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி
”திமுக தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டே இருந்ததா? பல தோல்விகளை திமுக சந்தித்துள்ளது. 2011 ல் எதிர் கட்சியாக கூட வரவில்லை. வெற்றி தோல்வி என்பது சூழலுக்கு தகுந்தபடி மாறும். கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஓபிஎஸ் சிறைக்கு செல்ல தயாராகிவிட்டார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. விரைவில் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வரும். அந்த வழக்கில் தண்டனை கிடைக்கும். அவர் குடும்பத்தில் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அது முதலமைச்சராக இருந்த எனக்கு தெரியும். என் மீது பழி சுமத்தி தப்பிக்க பார்க்கிறார். ஒபிஎஸ் திமுகவின் பி டீம்.
ஜெயலலிதாவிற்கு 2 கோடி கடன் இருந்ததாக சொல்வது வெட்கக்கேடானது. அது மோசமான வார்த்தை. ஓபிஎஸ் இடையில் வந்தவர். நாங்கள் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறோம். அம்மாவிற்கு எதிராக போட்டியிட்டவருக்கு ஓபிஎஸ் சீஃப் ஏஜெண்டாக இருந்தார். என் மீது உள்ள குற்றச்சாட்டுகளை சொல்லுங்க பார்ப்போம். அப்படி இருந்தால் திமுகவினர் விடுவார்களா? ஓபிஎஸ் சிறைக்கு செல்வது உறுதி. ஓபிஎஸ் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. திமுகவினர் எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவை ஒழிக்க முடியவில்லை. ஓபிஎஸ் திமுக உடன் கூட்டணி சேர்ந்து பொய் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்” எனத் தெரிவித்தார்.