சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பாக பொங்கல் விழாவும், மாட்டு பொங்கல் விழா நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார், தமிழக  பாரம்பரிய முறைப்படி நடந்த பிரம்மாண்டமான பொங்கல் விழாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். 70க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து கிராம மக்கள் உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடினர். 



இவ்விழாவில் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “தை பிறந்தால் வழி பிறக்கும். தற்போது தை பிறந்து விட்டது. அதிமுகவிற்கும் வழி பிறந்துவிட்டது. இங்கு மிக எளிச்சியாக பொங்கல் திருவிழா நடக்கிறது. இங்கு திரளான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்துள்ளனர் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் விவசாய தொழிலாளர்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த தி.மு.க அரச பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் பிரச்சனை தீர்க்கவில்லை. கிராமப்புறத்தில் தான் அதிகம் விவசாயிகள் வாழ்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எங்கெல்லாம் ஏரி இருந்ததோ அங்கெல்லாம் தூர்வாரப்பட்டடு தண்ணீர் சேகரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் பருவ காலத்தில் பெய்த மழை நீர் சேகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் தேவையான நீர் கிடைத்திருக்கிறது. விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டிய அரசு அம்மா அரசு. பயிர் காப்பீட்டு திட்டம் மூலம்விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வந்து அதைப் பெற்றுக் கொடுத்ததும் அம்மா அரசு தான். விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ததும் அம்மா அரசுதான்.



விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளும்  வழங்கியது அம்மா அரசு. மக்காசோளம் விளைவித்த போது அதில் பாதித்த விவசாயிகளுக்கு ரூபாய் 150 கோடி  வழங்கியது அம்மா அரசு. விவசாயிகளை காக்க இந்த திமுக அரசு மறந்துவிட்டது. கடந்தாண்டு திமுக அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியது. எப்பேர்ப்பட்ட பொங்கல் தொகுப்பு வழங்கியது என அனைவருக்கும் தெரியும். முதன்முறையாக பொங்கல் தொகுப்பு கொடுத்தது அதிமுக அரசு.கிராமப்புறம் முழுவதும் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு வழங்கிய போது ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 2500 வழங்கினோம். இது தவிர பச்சரிசி, முந்திரி சர்க்கரை, கரும்பு போன்றவையும் கொடுத்தோம். ஆனால் இந்தாண்டு கரும்பு கொடுக்க மறந்து விட்டனர் இதனால் விவசாயிகள் போராடினர் இதனால் கரும்பு வழங்கப்பட்டது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் என்ன பயன் அடைந்தனர் என்ன லாபம் பெற்றனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மின் கட்டணம் உயர்ந்து விட்டது. வீட்டு வரியையும் உயர்த்தி விட்டனர். பல்வேறு மாவட்டங்களில் கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது எல்லா கிராமத்துக்கும் கால்நடை மருத்துவர்களை அனுப்பி கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்து குணமாக வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். இது குறித்து தமிழக சட்டமன்றத்திலும் பேசினேன். முழுக்க முழுக்க விவசாயிகளின் அரசு அதிமுக அரசு. தலைவாசலில் புதிய தாலுகா உருவாக்கியதும் அதிமுக அரசுதான். தலைவாசல் கால்நடை பூங்கா கொண்டு வந்தது அம்மா அரசு தான். ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா இதுதான் இந்தியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா இதுதான். பிரம்மண்டமாக இந்த கால்நடை பூங்கா அமையும். ஆனால் இந்தத் திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டனர். தற்போது ஆமை வேகத்தில் கால்நடை பூங்கா பணிகள் நடக்கிறது. கால்நடை பூங்கா அருகிலேயே தோல் தொழிற்சாலை கொண்டு வருவதாக கேள்விப்பட்டேன் இந்த போல் தொழிற்சாலை வரக்கூடாது. இந்த தோல் தொழிற்சாலை வந்து விட்டால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கும் தலைவாசல் பகுதி முழுவதும் நீர்மட்டம் பாதிக்கும். சுற்றுச்சூழலும் பாதிக்கும். ஆகவே இந்த அரசு இந்த திட்டம் இருந்தால் கொண்டுவரக் கூடாது இந்த பூமிக்கு நீர் தான் தேவை. தோல் தொழிற்சாலை தேவையில்லை. இந்தத் திட்டத்திற்கு உங்களோடு நாங்கள் எதிர்ப்பு குரல் கொடுப்போம்.


இந்த அரசு முதியோர் உதவித் தொகையும் தரவில்லை. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாளாக மாற்றுவதாக அறிவித்தனர். ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. முதியோர் உதவி தொகையால் ஏழை எளிய மக்கள் பயன்பெற்றனர். இதையும் இந்த அரசு நிறுத்திவிட்டது. முதியோர் உதவித்தொகை ஆயிரத்திலிருந்து ரூபாய் 1500 உயர்வு தருவதாக தெரிவித்திருந்தனர் ஆனால் இதுவும் தரவில்லை. அதிமுக அரசுதான் மக்களின் அரசு. ஏழை எளிய ஒடுக்கப்பட்ட வாழ்வு ஏற்றம் பெறசிறப்பான திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு. நான் ஆளுநர் உரையில் பேசும்போது நியாய விலை கடையில் வேட்டி சேலைகள் வழங்க வேண்டும் என பேசி இருந்தேன். ஆனால் இதுவும் வழங்கப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றனர் இதுவும் ரத்து செய்யப்படவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு மருத்துவராக வேண்டும் என கருதி 7.5 உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது அம்மா அரசு.இதனால் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ மாணவிகள் பயன்பெற்று உள்ளனர். அரசு பள்ளியில் படித்த 564 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர் இவர்களது கல்வி செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்தது அம்மா அரசு” என்று கூறினார்.