பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் மோடியின் சாலை  பேரணி மூலம் தொடங்குகிறது. இரண்டு நாள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைத்து முக்கிய கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தேசிய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தவிர மற்ற மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். சுமார் 350 பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டத்திற்கு முன்னதாக, அமித் ஷா கூறுகையில், சமீபத்திய குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள், 2024ல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற செய்தியை அனுப்பியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை குறிப்பிடாமல், அமித் ஷா, குஜராத் மாநிலத்தையும், பிரதமர் மோடியையும் வீழ்த்த முயற்சித்தவர்களுக்கு குஜராத் மக்கள் பதிலடி கொடுத்தனர் என கூறினார்.  


தேசிய செயற்குழுவில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடையும் நிலையில், ஒரு வருட கால பதவி நீட்டிப்பை பாஜக தலைமை அறிவிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்த மூன்று-நான்கு தீர்மானங்கள் இருக்கலாம், இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஜி20 முன்னணி பொருளாதாரங்களின் உயரடுக்கு குழுவின் தலைமைப் பதவியை இந்தியா பெற்றதைத் தொடர்ந்து, G20 நிகழ்வுகளை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல கட்சியினர் செயல்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 9 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இக்கூட்டம் தேர்தல் ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்யும் எனவும், ஜூலை 2022 இல் ஹைதராபாத்தில் நடைபெற்ற கடைசி தேசிய செயற்குழு கூட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட பணிகளை செயல்படுத்துவதை மதிப்பீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு டெல்லியில் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  


ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சிகளுக்கு மத்தியில், இன்று டெல்லியில் பாஜக சாலைக் கண்காட்சியை (road show) நடத்துகிறது. மாலை 3 மணி முதல் படேல் சௌக் ரவுண்டானாவில் இருந்து கூட்டம் நடைபெறும் இடமான என்டிஎம்சி மாநாட்டு மையம் வரை சாலைப் பேரணி நடைபெறுகிறது. டெல்லியில் சில பகுதிகளில் இன்று ரோட் ஷோவை முன்னிட்டு சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.


கட்சியையும் அமைப்பையும் எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும், தேர்தல் வெற்றிக்கான பிரதமரின் மந்திரம் குறித்தும் பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் உரையாற்றுவார். ஜி20 நிகழ்வுகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் அணிதிரட்டல் குறித்து ஜேபி நட்டா சமீபத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர்களின் மாரத்தான் கூட்டத்தை நடத்தினார்.  


இதற்கிடையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர், தகவல் தொடர்புச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பாரத் ஜோடோ யாத்ராவின் வெற்றியால் பிரதமர் நரேந்திர மோடி கலக்கமடைந்துள்ளார் எனவும் இதனால் தற்போது அவர் கேலிக்கை யாத்திரை நடத்துவதாக கூறினார்.