கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழகத்திலேயே அதிகப்படியாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழையானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பதிவானது. இதனால் சீர்காழி நகர் மட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதும் தண்ணீரில் மூழ்கி தற்போது வரை தத்தளித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளிலும், மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,67,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பா, தாளடி பயிர்களில் 87,500 ஏக்கர் நிலப்பரப்பு மழை நீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பான 30 ஆயிரம் ஏக்கரில் 25 ஆயிரம் ஏக்கர்  மழை நீரால் சூழப்பட்டுள்ளது. 




அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் காலநிலை துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ. வி.மெய்யநாதன் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்கள் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்‌. அதன் ஒரு பகுதியாக திருநகரி, கீழச்சாலை மேலச்சாலை, அல்லிவிலாகம் பெருந்தோட்டம், பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்தார். அதன்படி 1,61, 647 பயனாளிகள் பயன்பெறுவார்கள். அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பாக அனைத்து ஊராட்சிகளிலும் நிவாரணம் வழங்கும் பணியை தற்போது துவக்கி வைப்பதாகவும், இதன்மூலம் முதல் கட்டமாக 7500 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.




மேலும்,  “எடப்பாடி பழனிசாமி வந்த இடத்தில் போகிற போக்கில் வார்த்தைகளை அள்ளித் தெளித்து சென்றுள்ளார். அதேபோன்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை அப்போது உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். சீர்காழி அருகே திருவாலி ஏரியை தூர்வாராமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு என உண்மைக்கு புறம்பாக இபிஎஸ் கூறி சென்றுள்ளார். உண்மையிலேயே 2017- 18 இரண்டு கட்டங்களாக ஏழு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  அதிமுக ஆட்சியின் போது தூர் வாரும் பணியானது நடைபெற்றது.




இந்த நிலையில்  தற்போது திருவாலி ஏரியை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறாக திமுக தான் தூர்வாரியது என்று  பேசி சென்றுள்ளார்‌. அதிமுக ஆட்சியில் தான் தூர் வாரியது என்பதற்கான  ஆதாரம் தன் கையில் உள்ளது. அதிமுகவினர் உண்மைக்கு மாறான பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, கஜா புயலின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது சொந்த தொகுதி மக்களால் முற்றுகையிடப்பட்டு சுவர் ஏறி குதித்து ஓடியவர். ஆனால், நாங்கள் தற்போது வரை மக்களுக்கான களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்.  திமுக செயல்பாட்டை பற்றிகூறும்  ஓ.எஸ்.மணியன் மக்களால் புறக்கணிக்கபட்டவர் ஆகையால் அவர் கூறுவதற்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.