தமிழகத்தில் நாள் தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டுள்ளது. எனவே அதிமுக சார்பில் தமிழகம் முழுவதுமுள்ள மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள்தோறும் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து தமிழக மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை கழக நிர்வாகிகள் இலவசமாக வழங்கவேண்டுமென அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
அதன்படி கடந்த சனிக்கிழமை சேலம் மாவட்டம் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளில் நீர் மோர் பந்தலினை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து இன்று சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி, கொங்கணாபுரம், எடப்பாடி மற்றும் ஓமலூரில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதையடுத்து ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி,
"திமுக தலைவர் ஸ்டாலின் எனது டெல்லி பயணம் குறித்து பேசி உள்ளார். நான் முதல்வராக இருந்தபோது டெல்லி பயணத்தை டெல்லிக்கு காவடி தூக்குவதாக பேசினார். இப்போது திமுக தலைவர் என்ன காவடி தூக்கி சென்றார். மத்திய அரசுடன் அதிமுக இனக்கமாக இருந்ததால் ஏராளமான நிதி பெற்று தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் தந்தோம். தமிழகத்தில் உள்ள மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. முதலமைச்சர் குடும்பமே துபாய் சென்றனர். தமிழகத்திற்கு முதலீடு ஈர்க்க சென்றாரா, தனது குடும்பத்திற்கான தொழில் தொடங்க சென்றாரா என்று மக்கள் கேட்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு 10 மாதத்தில் சர்வதேச கண்காட்சி தொடங்கப்பட்டது. ஆனால் முடியும் தருவாயில்தான் தமிழக அரங்கை திறந்தது வேடிக்கையானது. மத்திய அரசு கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால் டெல்லிக்கு ஓடி மத்திய அமைச்சர்களை பார்த்துள்ளார். மத்திய அமைச்சர்கள் மிகப்பெரிய வரவேற்பு தந்ததாக தங்கம் தென்னரசு கூறினார். மத்திய அரசில் உள்ளவர்கள் அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள். ஆனால் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கோபேக் மோடி என்று பலூண் பறக்கவிட்டார் ஸ்டாலின். அரசியல் நாகரீகம் தெரியாதவர் ஸ்டாலின்” என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்