எங்களது ஆட்சியை போலவே என்.ஆர்.காங்கிரஸ் அரசை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.


புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் அவசரம், அவசரமாக பல்வேறு சட்டங்களை விவாதம் இல்லாமல் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இஸ்ரேல் நிறுவனத்தின் பெகசஸ் என்ற  உளவு மென் பொருளை பயன்படுத்தி பல்வேறு கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்டுள்ளனர். இது குறித்து  பிரதமர், உள்துறை அமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை.  


பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தது. அந்த அதிகாரத்தை மீண்டும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி உள்ளது. இது மிகப்பெரிய சிறந்த சீர்த்திருத்தம். சாதி வாரியாக மத்திய அரசே கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை நிலை நாட்ட மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.




அரசு பள்ளிகளில் படித்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். பட்ஜெட்டுக்கான கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் சமயத்தில் ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம், 15 ஆவது நிதி கமிஷனில் இணைப்போம், கடனை ரத்து செய்வோம், பஞ்சாலைகளை திறப்போம், கூட்டுறவு நிறுவனங்களை திறப்போம், தேவையான நிதி பெறுவோம் என்று வாக்குறுதி அளித்தனர்.


மக்களும் அதனை நம்பி வாக்குகள் அளித்தனர். பாஜகவுடன் கூட்டணி வைக்க மாநில அந்தஸ்து தான் காரணம் என்று கூறிய ரங்கசாமி வாய் மூடி மவுனியாக இருக்கிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? எங்கள் ஆட்சியை போலவே தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதல் 2 நாட்களுக்குள் கிடைக்கும். தற்போது ஒரு மாதம் ஆகியும் கோப்பு இருக்கும் இடம் தெரியாத நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.



 


சாக்பீஸ் முனையில் யானை உருவத்தை செதுக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் உடற்கல்வி ஆசிரியை!


புதுச்சேரியை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புறக்கணிக்கிறார்கள். மின் வினியோகத்தை மத்திய அரசு தற்போது தனியார் மயமாக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது. இதை தடுக்க பா.ஜ.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னால் முதல்வர் நாராயணசாமி அதில் கூறியுள்ளார்.