முன்னாள் அமைச்சர் தங்கமணி(Thangamani) தொடர்புடைய 68 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். 


2016-21 வரையிலான முந்தைய ஆதிமுக ஆட்சியில்  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக செயல்பட்டு வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.




இவரது தந்தை பெருமாள் கவுண்டர், தாயார் செல்லம்மாள். 61 வயதான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், பரணிதரன் என்ற மகனும், லதாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். முந்தைய ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் செயல்படுத்தியதில் இருவர் முக்கியஸ்தர்களாக இருந்தனர். ஒருவர் வேலுமணி, மற்றொருவர் தங்கமணி. அதிமுக மாஜி அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடக்கும் என்ற பேச்சு வந்த போதே, அதில் தங்கமணி பெயர் கண்டிப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 


கடந்த ஆட்சியில் அரசிலும், கட்சியிலும் அதிகாரம் படைத்தவராக செயல்பட்ட தங்கமணி, அதிமுகவின் கூட்டணி செயல்பாடுகளை முன்னின்று நடத்தியவர். குறிப்பாக பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் முக்கியஸ்தராக செயல்பட்டவர். அதுமட்டுமின்றி, அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனை வரும் போதெல்லாம், அவர்களை சமரசம் செய்து வைக்கும் குழுவில், தங்கமணி மும்முரமாக செயல்பட்டார். 


தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள தங்கமணி, திமுக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் தன் கருத்துக்களை துணித்து முன்வைத்தார். இன்றும், அதிமுகவில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டியலில் டாப் 2 என்கிற இடத்தில் தங்கமணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சிஏஜி அறிக்கை: 


முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2013 முதல் 2018 வரை தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் மின்சாரத்துறையில் 26ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 


இந்த குற்றச்சாட்டை மறுத்த தங்கமணி, மின்சார வாரியம் என்பது சேவைத்துறை. அது வருமானம் ஈட்டித்தரும் துறை கிடையாது.  மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசின் நிதி உதவி பெற்று மின் கட்டணத்தை உயர்த்தாமல் தடையில்லாத மின்சாரத்தை வழங்கினோம் என்று தெரிவித்தார்.