யூடிப்பரான மாரிதாஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் டிவிட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து தி.மு.கவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது (124A, 153-A , 504 505 (1)b 505 (2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது எனவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி மாரிதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "முப்படைகளின் தலைமை தளபதி மரணத்தின் அடிப்படையில் தேவையற்ற கருத்தை மாரிதாஸ் முன்வைத்துள்ளார். மாநில அரசுக்கு எதிராகவும், அதன் நேர்மையையே கேள்விக்குள்ளாகும் வகையிலும் பதிவு செய்துள்ளார். இளம் உள்ளங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக அவரது பதிவு உள்ளது. இது தொடர்பாக தேவையற்ற கருத்தை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "சீமான், மாரிதாஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்" என கருத்து தெரிவித்தார். மனுதாரர் தரப்பில், "மாரிதாஸ் அரசை விமர்சிப்பவர். அவரை அமைதியாக்குவதற்கே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பதியப்பட்ட பிரிவுகள் அடிப்படை ஆதாரமற்றவை என வாதிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிபதி, மனுதாரரை 2 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். மனுதாரர் நன்கு அறிந்தே இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது செல்லாது எனக்கூறி, மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தேசிய சிந்தனையாளர் மாரிதாஸ் மீது முப்படை தளபதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி தி.மு.க அரசு பொய் வழக்கு பதிவு செய்தது, காவல்துறையினர் அத்துமீறி அழைத்துசென்று பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர் எனவும், தி.மு.க அரசு திட்டமிட்டு மாரிதாஸை கைது செய்து புனையப்பட்ட பொய் வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது, இந்த தீர்ப்பில் யூடியுப்பர்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என கூறியுள்ளது,
இந்த தீர்ப்பு திமுக கொடுங்கோல் அரசுக்கு பாடமாக அமைந்துள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு திமுக ஆட்சிக்கு வந்தபோதே மக்களுக்கு அராஜகம் நடக்கும் என அச்சம் வந்துவிட்டது, பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை உத்தரவின் பெயரில் மாரிதாஸ்க்கு ஆதரவாக நின்றோம், உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பானது அனைத்து யூடிப்பர்ஸ்களுக்கும் இந்த வெற்றி சேரும், எங்கள் மீதான பொய் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்போம், பி.ஜே.பியிற்கு எதிராக கூட கருத்து சொல்லட்டும் ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம். பாஜகவினர் போராட்டம் நடத்துவது போல் அதிமுகவினர் போராட்டம் நடத்துவதில்லையே என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ’’போராட்டம் போராட்டம் என்று மக்களை இடையூறு செய்ய தலைவர்கள் விரும்பவில்லை’’ என பதிலளித்து இருந்தார். செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கு பதிலளித்து பேசிய டாக்டர் சரவணன், போராட்டம் இல்லையென்றால் சுதந்திரமே கிடைத்திருக்காது என பதில் அளித்துள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!