சேலத்தில் நடைபெற்று முடிந்த அதிமுக உட்கட்சித் தேர்தல் ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான உடுமலை ராதா கிருஷ்ணன் மற்றும் மகேந்திரன் வழங்கினார்.



தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக  சேலம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 37 ஒன்றியத்துக்கு உட்பட்ட 5,635 கிளைகள், 33 பேரூராட்சிகளுக்குட்பட்ட 511 வார்டுகள், 4 நகராட்சிகளுக்குட்பட்ட 111 வார்டுகள், மாநகரத்திற்குட்பட்ட 60 வட்டங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், நேற்று முன்தினம் காலை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சரும், அதிமுக உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குச் சீட்டு வழங்கி தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓமலூர், ஆத்தூர் புறநகர் கட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார். 



இந்தத் தேர்தலில் பல நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சிலர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். பல பதவிகளுக்கு இழுபறி நீடித்து வந்தது, இதனிடையே நேற்று மாலை அதிமுக உட்கட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில் சேலம் புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனும், மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கழக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அனைத்து பூர்த்தி செய்யப்பட்ட சான்றிதழ்களும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான உடுமலை ராதா கிருஷ்ணன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் ஆணையாளர்கள்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர்கள் சித்ரா, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, ராஜமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.