சாதிய ஆணவக் கொலைகள் என்பது தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றது என்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். ஆணவக்கொலைகளுக்கு ஆளான காதலர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என இந்தியா முழுவதும் பலர் உள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை புரட்டிப்பார்த்தால் இந்தியா முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு இல்லாத மக்கள் இவ்வாறன குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்ற மேம்போக்கான முடிவுக்கு நாம் வரக்கூடும். ஆனால் இதுதொடர்பாக பதிவு செய்யப்படாத ஆணவக் கொலைகள், அல்லது கொலையாக பதிவு செய்யப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள நீண்ட நெடிய ஆய்வே நடத்தவேண்டி உள்ளது. ஆணவக் கொலைகள் தொடர்பாக இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகள் இதைத்தான் கூறுகின்றன. 


ஆணவக் கொலைகளுக்கு எதிராக களமாடும் சமூக செயல்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் பலர் ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும் என கோரிக்கை வைத்தவண்ணம் உள்ளனர். சமீபத்தில் கூட சென்னை பள்ளிகரணையில் சுயமரியாதைத் திருமணம் அதாவது சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட பிரவீன் என்ற பட்டியல் சமூகத்தை சார்ந்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டி கொலை செய்தது. பிரவீனை கொலை செய்தவர்கள், பிரவீனின் காதல் மனைவி ஷ்ர்மிளாவின் சகோதரர் என்பதும், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் கொலை செய்ததாகவும் காவல்துரை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தலைநகர் சென்னையையே புரட்டிப் போட்டது மட்டும் இல்லாமல், கிராமங்களில் நடைபெற்றுவந்த ஆணவக் கொலைகள் தற்போது நகரத்திலும் நடந்துள்ளது சமூக செயல்பாட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமத்துவ புரம் எனப்படும் தலைநகர் சென்னை, மெட்ரோ சிட்டி சென்னை, சிங்காரச் சென்னை, சிங்காரச் சென்னை 2.0 என பல வடிவங்களை சென்னை கடந்து வந்த பாதையில் இதற்கு முன்னர் ஆணவக் கொலைகள் நடந்திருக்கலாம். ஆனால் தலைநகர் சென்னையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஆணவக் கொலை நடைபெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 






தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆணவக் கொலைகள் நடைபெற்று வரும் நிலையில், ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ”தி கேஸ்ட் லஸ் கலெக்டிவ்” பேண்ட் குழுவினர் பாடல் ஒன்றைப் பாடி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 


அந்த பாடலில் ஆணவக் கொலயைத் தடுக்க இங்கொரு புதிய சட்டமும் வேண்டும். இந்த சாதியை ஒழிக்க திராவிட அரசு துணிஞ்சு இறங்க வேண்டும்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நீலம் பண்பாட்டு மையம் தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தையும் டேக் செய்துள்ளது. மேலும் ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றுக என்ற கேப்சனும் இடம் பெற்றுள்ளது.