2 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகைதந்த பிரதமர் மோடி, திமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தார். இந்நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அடுக்கடுக்கான பல கேள்விகளையும், திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
”ஜெயலலிதாவை புகழ்ந்தும் திமுகவை விமர்சித்தும் பேசியிருக்கிறார்”:
அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தாம் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள். அவரது உரையைப் பார்த்தபோது, அவரை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. பதவி நாற்காலி காலியாகப் போகும் இறுதிக் கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து அவர் முறுக்கி, முறுக்கி பேசத் தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு இந்தப் பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டிருந்தால் அவரைப் பாராட்டலாம். பத்தாண்டு காலத்தில் இந்திய நாட்டுக்குச் செய்து காட்டிய வளர்ச்சியைச் சொல்லி இருந்தால் வரவேற்கலாம். அப்படி எதுவும் இல்லாததால், திருப்பூர் கூட்டத்தில் ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்தும், திருநெல்வேலி கூட்டத்தில் தி.மு.க.வைக் கடுமையாக விமர்சித்தும் பேசிவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர்.
பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர் ஜெயலலிதா. நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் பெங்களூரு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததாகப் பிரதமர் பேசியிருப்பதைப் பார்த்துத் தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள். மோடி நிலைமை இந்தளவுக்குப் போய்விட்டதே என்று கேலி செய்கிறார்கள். “பதவிக்காக எந்தளவுக்குத் தரைக்கு இறங்கிவிட்டார் பிரதமர்” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.
2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி, ’தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. இந்த லஞ்சத்தினால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போய் இருக்கிறது’ என ஓசூரில் நின்று கடுமையாக விமர்சித்த மோடிதான், இன்றைக்குப் பல்லடத்தில் பல்டி அடித்திருக்கிறார்.
”மோடியா? இந்த லேடியா?'”
2014-ஆம் ஆண்டு தன்னை குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி நாயகனாகக் காட்டிக் கொண்ட நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது, தமிழ்நாட்டைவிட குஜராத் எந்த வகையில் வளர்ந்துவிட்டது என்று சொல்லி, 'மோடியா? இந்த லேடியா?' என்று கேட்டவர் ஜெயலலிதா. அத்தகைய மோடி இன்று தன்னைப் புகழ்வதைப் பார்த்து என்ன சொல்வது? ஜெயலலிதாவை வைத்து, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி. அவரிடம் சொந்தச் சரக்கு ஏதுமில்லை என்பதற்கு இதுவே சான்று.
தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர். தி.மு.க மீதும், அதன் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மீதும் பிரதமருக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாதது அல்ல. தனக்கு எதிரியே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து 'இந்தியா' கூட்டணி அமைக்க அடித்தளம் அமைத்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதுதான் பிரதமர் மோடியின் கோபத்துக்குக் காரணம்.
”புலம்பி இருக்கிறார் பிரதமர்”
மோடி ஏதோ சாதித்து விட்டாராம், அவரது சாதனையைத் தமிழ்நாட்டில் தி.மு.க மறைக்கிறதாம். இப்படி புலம்பி இருக்கிறார் பிரதமர். அவர் எந்தப் பகுதியில் பேசினாரோ அந்தப் பகுதியின் தொழில் வளத்தையே சிதைத்தது ஒன்றிய பா.ஜ.க அரசுதான்.
பின்னலாடை வர்த்தகச் சந்தைக்கான வாசலை வங்கதேசத்துக்குத் திறந்துவிட்டு, திருப்பூரை வஞ்சித்த மோடி, கொங்கு மண்ணின் பெருமையை எப்படிப் பேச முடிகிறது? வங்கதேசத்துக்குப் பின்னலாடை மூலப் பொருட்கள் 60 விழுக்காடு இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அங்கே உற்பத்தியாகும் துணி இந்தியாவிற்கே விற்கப்படுகிறது. வங்கதேச மண்ணுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்த மோடி அரசு, திருப்பூருக்குச் செய்தது அநீதிதானே! பின்னலாடை வர்த்தகத்தை நசுக்கிவிட்டு, ’’தொழில்துறையில் கொங்கு மண் முக்கியப் பங்காற்றுகிறது’’ எனக் கூசாமல் பொய் சொல்கிறார்.
"காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை” எனப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. 2004 – மார்ச் 2013 வரை டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கு தி.மு.க கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன? எனப் பிரதமர் தன்னிடம் இருக்கும் ஏஜென்சிகளிடம் கேட்டிருந்தால், சொல்லியிருப்பார்களே! சி.பி.ஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ., ஐ.பி என அதிகார அமைப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்குச் சேவை செய்யவே நேரம் போதவில்லையே!
தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய இரயில்வே கோட்டம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், சென்னையில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3ஜி தகவல் தொழில்நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி என ஒன்பதாண்டு காலத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களைத் தி.மு.க கொண்டு வந்தது.
இத்தகைய சிறப்புத் திட்டம் ஏதாவது தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க அரசு கொண்டு வந்ததாகப் பட்டியல் போட முடியுமா? ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் ஒரு செங்கல் வைக்கப்பட்டது. மறு செங்கல் இதுவரை வைக்கப்படவில்லை. 2024 மே மாதத்துக்குப் பிறகு பதவியேற்கும் புதிய பிரதமர்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டப் போகிறார். வீட்டில் இருந்தபடி மோடி அதனைப் பார்க்கப் போகிறார். மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸ் கூட திறக்க முடியாத உங்களால் மதுரைக்கு எப்படி வர முடிகிறது? கூச்சமாக இல்லையா?
”மக்கள் நிச்சயம் ‘அல்வா’ கொடுப்பார்கள்”
பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசாவைக்கூடத் தமிழ்நாட்டிற்குத் தரவில்லை. வெள்ளம் பாதித்த தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் வெறும் கையோடு வந்து முழம் போடுகிறார்கள். வெள்ளம் பாதித்த பகுதியை மேம்படுத்த 37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். அதில் கொஞ்சம் கூட தரவில்லை. தர மறுத்த நீங்கள் அது பற்றிய கூச்சமே இல்லாமல் தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் எப்படி வருகிறீர்கள்?
தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசா மட்டுமே வழங்குகிறது ஒன்றிய அரசு. ’29 பைசா மோடி’ தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது என்ன? சில திருக்குறள்களும் பாரதியார் கவிதைகளும் மட்டும்தானே!
நெல்லையில் 'அல்வா'வை நினைவூட்டி இருக்கிறீர்கள். பேரிடர் நிதியைக் கூட தராமல் ’அல்வா’ கொடுக்கும் மோடி ஆட்சிக்கு இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ‘அல்வா’ கொடுப்பார்கள்.
இந்தியாவின் முன்னேற்றத்தைப் பேசுவதைவிட, 'இந்தியா' கூட்டணியின் முன்னேற்றத்தைக் கண்டு தாங்க முடியாமல் மணிக்கொரு முறை இந்தியா கூட்டணிக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
’’என்னுடைய சாதனைகளை அச்சிடவிடாமல் நாளிதழ்களைத் தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க அரசு தடுக்கிறது. மக்களிடம் சென்று அடையாமல் தொலைக்காட்சிகளையும் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்துகிறது’’ எனப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. காலை, மாலை பேப்பர்களைப் படிக்கக்கூட உங்களுக்கு நேரமில்லையா பிரதமரே! அந்த தினசரிகளைக் கொஞ்சம் புரட்டி பாருங்கள். எல்லாத் தலைப்பு செய்திகளிலும் நீக்கமற நீங்கள்தான் நிரம்பியிருக்கிறீர்கள். நேரலை, விவாதங்கள், விறுவிறு செய்திகள், சிறப்புச் செய்திகள் எனத் தொலைக்காட்சிகள் முழுவதும் மோடி பற்றிய செய்திகளைத்தான் இரண்டு நாளும் வாசித்தன.
’’நாளிதழ்களை, தொலைக்காட்சிகளைத் திமுக கட்டுப்படுத்துகிறது’’ என எப்படி வாய் கூசாமல் சொல்கிறீர்கள். பொய்களை சொல்லவும் ஏமாற்றத்தைத் தூண்டவும்தான் பிரதமருக்கு அதிகாரம் தரப்படுகிறதா? மாநிலங்களை ஒடுக்குவதில் ஹிட்லராகவும், பொய்களைப் புனைவதில் கோயபல்ஸாகவும் என இரண்டுமாகவே ஆகிவிட்டார் அவர்.
’’தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகனை ஒன்றிய அமைச்சராக்கி உள்ளோம்’’ எனப் பெருமைப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒன்றியத்தில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த நான், தயாநிதி மாறன், ஆ.இராசா, மு.க. அழகிரி, ப.சிதம்பரம், அன்புமணி, பழனிமாணிக்கம், ஜி.கே.வாசன், நெப்போலியன், மணிசங்கர் அய்யர், அர.வேலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி என எவ்வளவு பேர் அமைச்சர்களாக இருந்தார்கள் என எண்ணிப் பாருங்கள்.
இணை அமைச்சர் பொறுப்பில் முருகனை நியமித்துவிட்டு, பெருமை அடிக்காதீர்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கேபினேட் அமைச்சர்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் உட்படப் பலர் நியமிக்கப்பட்டனர். அந்த வரலாற்றை எல்லாம் மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார் மோடி.
’’மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’’ என்கிற பொய்யைச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. ஜி.எஸ்.டி நிதி முதல் பேரிடர் நிதி வரை தராத ஒன்றிய அரசின் ஏமாற்று வேலையைத் திமுக தோலுரிப்பதால் ’’ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’’ எனப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் கொடுத்தது தமிழ்நாடு அரசுதான். அமைக்காமல் ஏமாற்றியது யார்? மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அனுமதி கொடுக்காமலும், நிதி கொடுக்காமலும் ஏமாற்றுவது யார்?
திமுக ஒன்றிய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில்தான் 1,650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தை முடக்கினார். மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு அமைந்த பிறகு அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்துப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அத்தகைய தி.மு.க அரசின் மீதுதான் ’’ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’’ எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.
’’தி.மு.க.வை இனிப் பார்க்க முடியாது. இனித் திமுக எங்குத் தேடினாலும் கிடைக்காது’’ எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. ’’திமுக அழிந்து போகும். தலைதூக்காது’’ என திமுக உருவான 1949-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது.
தி.மு.க.வையே இல்லாமல் ஆக்கிவிடுவாராம். சவால் விட்டுள்ளார். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் அவரும் விரைவில் இணைந்துவிடத்தான் போகிறார் என்று எச்சரிக்கிறேன் என திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்..