உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் மக்களவை தேர்தலானது 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.


இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சையாக பேசினாரா பிரதமர்?


நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளுப்போவது யார் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். அந்த வகையில், முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.


இதையடுத்து, வரும் 26ஆம் தேதி, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.


இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசினார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தேசத்தின் வளங்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் உரிமை வழங்கப்படும் என்றார்.


"தேசத்தின் வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை"


தொடர்ந்து வரிவாக பேசிய அவர், "நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. தனிநபர்களின் சொத்துக்கள், நம் பெண்களுக்கு சொந்தமான தங்கம், பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி, அரசு ஊழியர்களின் நிலம் மற்றும் பணம் ஆகியவற்றைக் கண்டறிந்து மறுபங்கீடு செய்ய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் சொத்துக்களையும் அரசாங்கம் பறிப்பதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா?


தேசத்தின் வளங்கள் மீது முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என 2006 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். அதாவது அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்டவர்களுக்கும் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும் என காங்கிரஸ் கூறுகிறது. இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?


பெண்களின் தாலியை கூட அர்பன் நக்சல் சித்தாந்தம் கொண்ட காங்கிரஸ் பறித்துவிடும். எனது அம்மாக்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகள் வெறும் காட்சிக்காக அல்ல. அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். காங்கிரஸ் அந்த அளவுக்குச் சரிந்துவிட்டது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கைகளில் செல்வதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?


ஒரு காலத்தில் மக்களவையில் 400 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், இம்முறை 300 தொகுதிகளில் நிற்க வைக்க கூட வேட்பாளர்கள் இல்லாமல் திணறுகிறது. செய்த பாவங்களுக்காக தேசம் அவர்களை தண்டிக்கிறது" என்றார்.