மக்களவைத் தேர்தல் 2024:


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை தேர்தல் எப்போது என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. அதே நேரம் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. தற்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன என்றே சொல்ல வேண்டும்.  இந்த மக்களவைத் தேர்தலில் எப்படியாவது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வீழ்த்தி விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி விரும்புகிறது.


அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு மக்களுக்கான எந்த தேர்தல் அறிவிப்புகளையும் நிறைவேற்றவில்லை என்றும், எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் பிரதமர் மோடியையும் கடுமையாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.


மோடியின் பெயரை உச்சரித்தால்:


இந்நிலையில் தான் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக இன்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.






இதில், கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “பல ஆண்கள் பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்கின்றனர். ஆனால், நீங்கள் அதை சரியாக கையாள வேண்டும். உங்கள் கணவர் மோடியின் பெயரை உச்சரித்தால் அவருக்கு இரவு உணவு வழங்க மாட்டேன் என்று கூறுங்கள்என்றார். தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பெண்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும். ஆனால், பாஜகவினர் இந்த திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.


ஊரில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.1000 கொடுத்து கெஜ்ரிவால் பணத்தை வீணடிக்கிறார் என்கிறார்கள்நான் அவர்களிடம் கேட்கிறேன், நீங்கள் பல தொழில் அதிபர்களின்  பெரிய கடன்களை எப்போது தள்ளுபடி செய்தீர்கள், அவர்கள் கெட்டுப் போகவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும்,”உங்கள் கணவர், சகோதரர்கள், தந்தை மற்றும் உள்ளூர் மக்களை அவர்களின் நலனுக்காக உழைக்கும் நபருக்கு வாக்களிக்கச் செய்வது உங்கள் பொறுப்புஎன்று மகளிரிடம் கேட்டுக்கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.