EPS On TN Govt: போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது தமிழ்நாடு அரசின் செயல்பாட்டின் மீதுள்ள அதிருப்தி தொடர்பான மனுவையும் வழங்கினார்.
ஆளுநரிடம் மனு கொடுத்த எடப்பாடி பழனிசாமி:
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைய சூழலில் நிலவுகிறது. இதே நிலை தொடர்ந்தால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, தமிழகமே சீரழிந்து விடும், என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். ஏற்கனவே ஆளுநரை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து இருப்பது குறித்து ஆளுநரிடம் தெரிவித்து இருந்தோம். அரசின் அலட்சியம் காரணமாகவும், உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் தற்போதும் எடுத்துரைத்துள்ளோம்.
”போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு”
திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியதாக, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பல்வேறு வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தியதாக செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் பெற்ற வருமானத்தில் திரைப்படம் எடுத்ததாகவும், திமுக பிரமுகர்களுக்கு நிதி அளித்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார். அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரை சந்தித்தும் அவர் அரசுக்கு நிதி அளித்துள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு துளி போதைப்பொருள் கூட தமிழ்நாட்டில் விற்கப்படவில்லை என்ற சூழல் உருவாக வேண்டும் என, ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.
”குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்”
போதைப்பொருள் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதியும் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். ஜாபர் சாதிக் விவகாரத்தில் உண்மையை மறைக்க திமுக முயல்கிறது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். குட்கா தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “முதலில் குட்கா குறித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும். குட்காவை தமிழக அரசு தடுக்கவில்லை. நீதிமன்றத்தில் கோட்டைவிட்டுள்ளது. போதைப்பொருள் எது என்பதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் என்பது, ஒருமுறை பயன்படுத்தினால் அதனை தொடர்ந்து பயன்படுத்த ஊக்குவிக்கும். இது உயிருக்கே ஆபத்தாகிவிடும். முன்பு எப்போதும் இல்லாத அளவில் கடந்த 10 நாட்களில் மட்டும் அதிகப்படியான போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது காவல்துறையினர் மீது சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.