2024-25 க்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அது குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதாகவும், அதை கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதோடு மத்திய பட்ஜெட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் எனவும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடியை கண்டித்து பதிவு ஒன்றையிட்டிருந்தார்.
அதில் ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் INDIA கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள், பிரதமர் மோடி அவர்களே “ தேர்தல் முடிந்து விட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால் நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!
அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என பதிவிட்டதோடு இண்டியா கூட்டாணி சார்பில் போராட்டம் நடத்திய வீடியோ ஒன்றையும் அதில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முன்னதாக அது குறித்து விமர்சித்த அவர், ஒரு நாட்டின் நிதி நிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.
அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது