நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.810.28 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளாக புதிய பேருந்து நிலையம், சட்டக்கல்லூரி உட்பட பல்வேறு திட்டப்பணிகளையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு 16031 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 


இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சேலம் மாவட்டத்தில் இருந்து 1997-ஆம் ஆண்டு புதிதாக நாமக்கல் மாவட்டத்தையே உருவாக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள் தான். தலைநகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாபெரும் கட்டடத்தை அமைத்து, அதற்கு ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என்று 50 ஆண்டுகளுக்கு முன்னால், பெயர் சூட்டியதும் நம்முடைய தலைவர் கலைஞர் தான். ஆரைக்கல் என்றும், நாமகிரி என்றும் அழைக்கப்பட்டு, இன்று நாமக்கல் என பெயர் பெற்றுள்ள நகர் இது. லாரி கட்டமைப்பு மூலமாக, இந்தியா முழுமைக்கும் சரக்குப் போக்குவரத்திற்கு அடித்தளமாக விளங்குகின்ற மாவட்டம் நாமக்கல். கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி, சவ்வரிசி ஆலைகள் என்று பொருளாதாரத்தை வளர்க்கும் தொழில்களும், நன்செய், புன்செய் நிலங்களும் நிறைந்த செழிப்பான பூமி‌. வியர்வை சிந்தும் உழைப்பாளர்கள், மண்ணைப் போற்றும் உழவர்கள், பாட்டாளித் தோழர்கள், தொழில் முனைவோர்கள் என்று எல்லோரும் சமமாய் வாழக்கூடிய மாவட்டம் இந்த மாவட்டம். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் நாமக்கல்.



மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதுடன் தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம். பெரிய பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் வளர்த்து வருகிறோம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி 10.69 விழுக்காடாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் வெளியாகி இருக்கிறது. இது அகில இந்திய வளர்ச்சி அளவைவிட விட மிக மிக அதிகம். நிறைய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிப் பார்த்தால் அனைத்து மாவட்டங்களும் வளர்ந்திருக்கும்! அனைத்துத் துறைகளும் வளர்ந்திருக்கும்! அனைத்து சமூகங்களும் வளர்ந்திருக்கும்! அந்த நிலையை உருவாக்கிக் காட்டுவதற்காகதான் நானும், நம்முடைய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்! 


இந்த வளர்ச்சி அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. அதன் மூலமாக பாராட்டுக்கள் கிடைக்கிறது. தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களும் பாராட்டுகின்ற அரசாக இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது. 


கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. நன்றாக கவனியுங்கள்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. இதை எதற்காக சொல்ல வருகிறேன் என்றால், இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? “தி.மு.க.வுக்கு மதிப்பு சரிந்துவிட்டது” என்று பேசி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் இந்த உலகத்தில் தான் இருக்கிறாரா? இல்லை, கனவுலகத்தில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், தினமும் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்கின்ற இலட்சக்கணக்கான மகளிரின் முகங்களில் தி.மு.க-வின் மதிப்பைப் பாருங்கள். அப்போது தெரியும் உங்களுக்கு. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை பெறும் ஒரு கோடிக்கும் அதிகமான என்னுடைய சகோதரிகளிடம் கேளுங்கள், தி.மு.க-வின் மதிப்பு உங்களுக்குத் தெரியும். 20 இலட்சம் குழந்தைகள் தினமும் காலையில் வயிறு நிறைய சாப்பிடுகிறார்களே… அதில் இருக்கிறது தி.மு.க-வின் மதிப்பு. இலட்சக்கணக்கான மாணவ மாணவிகள் ‘புதுமைப்பெண்’ திட்டத்திலேயும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்திலேயும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்களே, அவர்களுக்குத் தெரியும் தி.மு.க. ஆட்சியின் நன்மதிப்பு. “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திறன்மிக்கவர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெற்றியில் தி.மு.க. ஆட்சியின் மதிப்பு இருக்கிறது‌.



இந்த நிலையில்தான் தி.மு.க.வின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அவர் சொல்வதை மக்கள் காமெடியாக பார்க்கிறார்கள்‌. நான் அதை பொருட்படுத்துவதே இல்லை. அதற்கெல்லாம் நேரத்தை செலவிட நான் தயாராக இல்லை. நான் கேட்கிறேன்; கடந்த 5 ஆண்டுகளில் நடந்த, நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல், இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல் என்று அனைத்திலும் மக்களுடைய பேராதரவுடன் நாங்கள் வென்றிருக்கிறோம். தி.மு.க-வின் மதிப்பு சரியவில்லை; உங்கள் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் மதிப்பை அடமானம் வைத்தீர்கள். உங்களுடைய பதவியை காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்த காரணத்தினால், உங்களுடைய மதிப்பு மட்டுமல்ல. உங்கள் கட்சியின் மதிப்பும் மக்களிடம் சரிந்துவிட்டது. அதை முதலில் நீங்கள் உணருங்கள்.


மேற்கு மண்டலத்தின் நிலை என்ன இன்றைக்கு? மேற்கு மண்டலத்தை எங்களுடைய செல்வாக்கான பகுதி என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பீர்களே. இப்போது என்ன ஆனது? கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதையும் பொய்யாக்கிவிட்டதா! இல்லையா! நாடாளுமன்றத் தேர்தலின் முடிவையொட்டி 234 சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுத்துப் பார்த்தால், 222 தொகுதிகளில் எங்கள் கூட்டணி அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. 


எங்களைப் பொறுத்தவரை மக்களைப் பற்றித் தான், மக்களால் ஒதுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்டவர்கள் குறித்து, உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மக்களோடு மக்களாக இருந்து, மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் தொடர்ந்து வெற்றி பெறுகிறோம். மக்களான உங்கள் மேல் நம்பிக்கை வைத்து நான் சொல்கிறேன். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர வைப்போம் என்று கூறினார்.