எப்போதும் சொல்வது போல உதயநிதிக்கு அரசியலில் பக்குவம் இல்லை. பாஜகவிற்கும் என்றும் திமுகவிற்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பா.ஜ.கவிற்கும் திமுகவிற்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர் , உயர் கல்வி துறை அமைச்சரை மாற்றிய விவகாரம் முதல் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி பிஜேபி அரசுக்கு திமுக ஊது குழலாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், பாஜக மெஜாரிட்டியாக இல்லாத காரணத்தால் சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் பாஜகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், பாஜகவின் ஆட்சி கவிழ்ந்து விடும். அது போன்ற நேரத்தில் நாங்க இருக்கிறோம் கவலைப்படாதீங்க , நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம் என்று திமுக பிஜேபிக்கு ஆதரவு அளிப்பதாகவும், அதே போல் சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ் குமாரையும் மிரட்ட திமுகவை பிஜேபி பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.
திமுக என்ன சொன்னாலும் பாஜக கேட்கும்
திமுகவினர் மீது ED ரைடு, இன்கம் - டேக்ஸ் மற்றும் சிபிஐ விசாரணை உள்ளிட்டவை இல்லாத பட்சத்தில் பாஜகவிற்கு திமுகவினர் ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும், இதை மறைக்க தான் அவ்வப்போது, அடிப்பது போல் அடிப்பதும், அழுவது போல் அழுவதுமாக இருவரும் நடிப்பதாகவும் கூறியவர், திமுக என்ன சொன்னாலும் தற்போது பாஜக கேட்கும்.
மேலும், இதன் அடிப்படையில் தான் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு மாற்றம் இருக்கும் பட்சத்தில் திமுக பாஜகவிடம் சொல்லித்தான் மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
எங்கள் ஆட்சியில், காவல் துறை விவகாரங்களில் எப்போதுமே நாங்கள் தலையிடுவதில்லை. ஆனால் இப்போது காவல்துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் தவறு செய்பவர்களும் , காவல் துறையை ஏளனமாக நினைப்பவர்களும்,
சட்டத்தை கையில் எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்து வருகிறது. காவலரை ஆபாசமாக பேசிய அந்த வீடியோ நேற்று வெளியான உடனேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் சமுதாயத்திற்காக அர்ப்பணித்து பணியாற்றுவது காவல்துறை. அப்படிப்பட்டவர்களை மோசமான வார்த்தைகளால், காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார்கள்.
ஆனாலும் அந்த இடத்திலேயே அப்போதே அரெஸ்ட் நடவடிக்கை ஏதும் இல்லை. காரணம் அந்த கள்ளக்காதல் ஜோடி உதயநிதி என்ற பெயரை சொன்னது. அந்த பெயரை உச்சரித்தவுடன் காவல்துறை ஷாக் ஆனதாகவும், பொறுமையை கையாண்டதாகவும் கூறினார்.
மேலும், இதுபோன்ற விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் வரும். மறுநாள் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது அதற்கு சம்பவம் நடந்த போதே அவர்களை கைது செய்திருக்கலாமே ?
கடந்த வாரம் கனிமொழியின் பெயரை பயன்படுத்தி ஒருவர் காவலர்களிடம் சண்டையிட்டதை சுட்டிக்காட்டி, இதுபோன்ற விவகாரங்களில் ஆளும் கட்சி கண்டும் காணாமல் இருப்பதாலும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாலும் இம்மாதிரியான நிகழ்வுகள் தொடர்கிறது.
யார் தவறு செய்தாலும் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற வகையில், ஆளும் கட்சி எதிர் கட்சி என்று பார்க்காமல் அப்போதே களத்தில் இறங்கி காவலர்களை அவமதிக்கும் இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதைத் தவிர்த்து ஒரு நாள் கழித்து யார் இவர் ? இவரின் பின்னணி என்ன ? இவரின் பின் உதயநிதியோ அல்லது ஆளும் கட்சியினர் யாராவது இருக்கிறார்களா? என ஆற அமர விசாரித்து நடவடிக்கை எடுப்பதால் பிரச்சினைகள் தான் உருவாகும் என்று தெரிவித்தார்.
மழை வெள்ளம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ,
மீடியாக்கள் சிலதை திமுகவினர் கையில் வைத்துக் கொண்டு நேற்று இன்று , நேற்று இன்று என ஷோ கொடுத்ததாகவும், சென்னையில் ஏழு சென்டிமீட்டர் மழையே அதிக அளவில் பெய்ததாகவும், சென்னை தவிர்த்து புறநகர் பகுதிகளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்ததாகவும், மக்களை இயற்கை காப்பாற்றியதாகவும் உதயநிதியோ, ஸ்டாலினோ, சென்னை மேயரோ வந்து காப்பாற்றவில்லை. இவர்கள் வெறுமனே வந்து வண்டியில் இருந்து இறங்கி ஃபோட்டோ ஷூட் செய்தனர்.
பொதுச் செயலாளரின் அறிக்கையை ஏற்று இரண்டு நாள் அம்மா உணவகத்தில் உணவு வழங்கிய இவர்கள், அதை 24 மணி நேரம் முழுதாக போடவில்லை என்பதையும், காலையில் அம்மா உணவகத்தில் உணவு வழங்க ஆரம்பித்தால் அது 12 மணிக்குள் முடிவடைந்து விட்டது ஏனென்றால் முன்னூறு பேருக்கு மட்டுமே சாப்பாடு சமைக்கப்பட்டது.
அதிலும் அண்ணா நகரை சேர்ந்த ஒரு கவுன்சிலர் அம்மா உணவகத்தில் இருந்து உணவுகளை எடுத்து வெளியில் தானே வழங்குவது போல் சீன் போட்டதாக தெரிவித்தார்.அந்த செலவினை கார்ப்பரேஷன் செய்ததாகவும், ஆனால் சில திமுகவினர் லேபிள் ஒட்டும் வேலையை சரியாக செய்வதாகவும் கூறினார்.
மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மாநகராட்சி மூலமாக மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல், வெற்று விளம்பரத்தை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது என்றும், மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்,
தன்னை நம்பி வந்த ஒரு கட்சிக்காரரை, தன்னை நம்பி இருக்கிற ஒரு அமைச்சரை, தன்னை நம்பி இருக்கும் ஒரு முக்கிய மூத்த நிர்வாகியையே பலிகடவாக்கியது திமுக. இதிலிருந்து எப்படிப்பட்ட சுயநலவாதி திமுக என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பதவி இறக்கப்பட்ட அமைச்சர் நாசர் மீண்டும் ஏற்றப்பட்டது குறித்த கேள்விக்கு ,
எல்லாம் கலிகாலம் தான். அவர் மீண்டும் யார் மீதும் கல் எரியாமல் இருந்தால் போதும் என நகைச்சுவையாக பதிலளித்தார்.
இ.பி.எஸ் அவர்களின் விமர்சனம் குறித்து பேசிய அவர்,
வாரிசு அரசியல் என்று பார்த்தால் தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக தான். அப்பா மகன் பேரன் என தொடர்வதை தான் பொதுச்செயலாளர் சொன்னார். ஆனால் அதிமுகவில் சாதாரண கொடி பிடிக்கும் தொண்டன் கூட கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பிற்கும், அதேபோல் அரசு பொறுப்பிற்கும் வர முடியும்.
எப்போதும் சொல்வது போல உதயநிதிக்கு அரசியலில் பக்குவம் இல்லை. அதற்கு உதாரணமாக நேற்று அவர் அதிமுகவில் சில பெயர்களை குறிப்பிட்டு, அவர்களெல்லாம் ஏன் பொதுச்செயலாளர் ஆகவில்லை, முதல்வர் ஆகவில்லை என்று கேட்டார்.
ஆனால், அவர் சொல்லிய பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செம்மலை ஆகியோர் எம்.எல்.ஏ கூட கிடையாது. அவர்களை எப்படி முதல்வராக்குவது. தரவுகளை சரிபார்க்காமல் பேசும் இவரெல்லாம் நமக்கு துணை முதல்வர் என்று விமர்சனம் செய்தார்.