தமிழ்நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி வரும் போதெல்லாம் அன்றைய மாநில முதல்வர்களும், அமைச்சர்களும் அவரை `விழுந்து விழுந்து’ கவனித்துக் கொண்டதும், அதே வேளையில் சமூக வலைத்தளப் பக்கங்களில் #GoBackModi என இணையவாசிகள் சர்வதேச ட்ரெண்ட் செய்வதும் சமீப ஆண்டுகளில் சடங்காக மாறிப் போயுள்ளன. இந்த ஹாஷ்டாக்கை வழக்கமாக ட்ரெண்ட் செய்பவர்களுடன் இணைந்து கொள்ளும் திமுகவினர், இந்த முறை `ஆட்டத்துக்கு வரலப்பா’ என்று ஜகா வாங்கியிருக்கிறார்கள். 


`தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடிக்குத் திமுக ஏன் கறுப்புக் கொடி காட்ட வேண்டும்? எதிர்க் கட்சியாக இருந்த போது நாங்கள் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டினோம். ஆனால் இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். அவர் தமிழ்நாட்டின் விருந்தினராக வருகிறார். நாங்களே அழைத்துவிட்டு, நாங்களே கறுப்புக் கொடி காட்டினால், அது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?’ என்று சமீபத்தில் பேசியுள்ளார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. 


இப்படியான பின்வாங்கல்கள் திமுகவுக்குப் புதிதல்ல. எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து, ஆட்சிக் கலைப்புகளால் அல்லல் பட்டு, தன் மகன் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலரையும் மிசா சட்டத்தின் கீழ் சிறை வைத்ததைக் கண்டு உள்ளம் துடித்து களமாற்றிய அன்றைய திமுக தலைவர் கருணாநிதி, சில ஆண்டுகளிலேயே இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்து `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ எனத் தமிழ்நாட்டிற்கு வரவேற்றார். 



அரசியல் சதுரங்க விளையாட்டில் இதுபோன்ற சமரசங்கள் நிகழ்வது இயல்பு என்றாலும், இவற்றிற்காக ஒவ்வொரு முறையும் வீழ்த்தப்படும் சிப்பாய்கள் எளிய மக்கள்தாம். நீட் தேர்வு விலக்கு, ஜி.எஸ்.டி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு, புதிய கல்விக் கொள்கை எனப் பல்வேறு விவகாரங்களில் பாஜகவின் நிலைப்பாடு மீதான எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி வரும் செயற்பாட்டாளர்களும், இணையவாசிகளும் திமுகவின் இந்தப் புதிய நிலைப்பாட்டிற்குப் பிறகும், இதே ஹாஷ்டாக்கை சமீபத்தில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.


கடந்த 2018ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவின் ஆட்சியின் போது, சென்னையில் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வந்த போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்தியது திமுக. சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கறுப்புச் சட்டை அணிந்த திமுக தொண்டர்கள் குழுமியிருந்தனர். உச்சகட்டமாக கறுப்பு வண்ணத்திலான ராட்சத பலூன் #GoBackModi என்று எழுதப்பட்டு வானில் பறக்கவிடப்பட்டது. இணையத்திலும் இந்த ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பெற்றது. 






அதற்கு அடுத்ததாக, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் மோடி தமிழகம் வந்த போதும், பிப்ரவரி மாதம் திருப்பூர் வந்த போதும், மார்ச் மாதம் கன்னியாகுமரி வந்த போதும், செப்டம்பர் மாதம் சென்னை ஐஐடிக்கு வந்த போதும், #GoBackModi ட்ரெண்டிங்கில் தேசிய இடங்களையும், சர்வதேச இடங்களையும் பிடித்து வந்தது. இதில் பெரும்பாலும் திமுகவின் தொழில்நுட்ப அணியின் தாக்கம் இருந்ததாக பாஜகவின் தமிழகத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். 



கடந்த 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் சென்னைக்கு அருகில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்புக்காக சென்னை வந்த மோடிக்கு இணையத்தில் மீண்டும் எதிர்ப்புகள் எழுந்தன. இதே ஹேஷ்டாக் மீண்டும் தலைதூக்க, இந்த முறை தேசிய அளவில் பலராலும் பரவலாக பேசப்படும் விவகாரமாக இது மாறி, `திமுக சதி’ என்ற நிலையில் இருந்து இதனைப் `பாகிஸ்தான் சதி’ என தேசிய அளவிலான ஊடகங்கள் குறிப்பிட்டன. எனினும் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த தீ, கேரளாவில் #PoMoneModi என்றும், கர்நாடகத்திலும், ராஜஸ்தானிலும் #GoBackModi என்றும் பரவின. 
 
2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போதும், இதே ஹேஷ்டாக் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் புகழ்பெற்றவரும், நடிகையுமான ஓவியா தன்னுடைய ட்விட்டரில் இந்த ஹேஷ்டேக்கைப் பதிவு செய்திருந்தார். திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் ராஜகண்ணப்பன், கீதா ஜீவன் முதலானோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு, தங்கள் தொகுதியில் பிரசாரம் செய்யுமாறு அழைப்பு விடுத்து கிண்டல் செய்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, தற்போது சுமார் 8 மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில், வரும் ஜனவரி 12 அன்று, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்காகப் பிரதமர் மோடி வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் மேற்கூறப்பட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன. 



கடந்த காலங்களில் பிரதமர் மோடி வந்த போது, `கோ போக் மோடி’ என்று எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது ஆட்சியமைத்தவுடன் பிரதமர் மோடியை வரவேற்கத் தயாராகிவிட்டது. அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதி கரோல் மோஸ்லீ பிரவுன், `அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை; நிரந்தர தனி நலன்கள் மட்டுமே உண்டு’ என்றார். 


இது அமெரிக்க அரசியலுக்கு மட்டுமல்ல; தமிழக அரசியலுக்கும் எப்போதும் பொருந்தும்.