நாட்டின் முதல் பெண்ணிய சின்னமாக கருதப்படும் சாவித்ரிபாய் புலே என்பவர் தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். 1831 ஜனவரி 3ம் தேதி மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். சாவித்ரிபாய் புலேவிற்கு அவரது 9 வயதில், 13 வயதான ஜோதிராவ் புலேவை 1840ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.


மகர்வாடாவில் ஒரு புரட்சிகர பெண்ணியலாளரும், தன் கணவரது வழிகாட்டியான சகுனாபாயுடன் சேர்ந்து சிறுமிகளுக்கு கற்பிக்கத் தொடங்கினார். சில நாட்களில் சாவித்ரிபாய், ஜோதிராவ் மற்றும் சகுனாபாய் ஆகியோர் இந்தியாவில் சிறுமிகளுக்கான முதல் பள்ளியை தொடங்கினர். 1848ம் ஆண்டில் துவக்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே படித்தனர். ஆசிரியராக பொறுப்பேற்ற சாவித்ரிபாய், சிறுமிகள் படிப்பை தொடர ஊக்க தொகையும் வழங்கினர். மேலும் இதுபோன்றே சிறுமிகளுக்காக மேலும் 18 பள்ளிகளையும் அடுத்தடுத்து தொடங்கினர்.



பின் விதவை பெண்களை துன்புறுத்தும் மூடபழக்க வழக்கங்கள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்து பாடுபட்டார் சாவித்ரிபாய் புலே. சாதி மற்றும் ஆணாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்த சாவித்திரிபாய், சிறுமிகளுக்கான கல்வியின் அவசியம் குறித்துப் பேசினார். கல்வியாளர் மற்றும் கவிஞர் என பன்முகம் கட்டிய இவர் பாகுபாடு, சாதியின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள் மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக கருத்துக்களை எழுதி பரப்பினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான பெண்களுக்காக பராமரிப்பு மையம் திறந்து, அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தையை பிரசவிப்பதற்கு ஆதரவளித்தார்.


தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்களுக்காக அவர் தனது சொந்த வீட்டில் ஒரு கிணற்றை நிறுவினார். இப்படியாக பல புரட்சிககை தன் வாழ்வினுள் அடக்கிய சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளான இன்று தலைவர்கள் ட்விட்டரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.