கரூரில் இன்று நிதிநிலை அறிக்கையின் விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலம் நெருங்குவதால் கரூர் மாவட்டத்தில் மாதம் தோறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட திமுக செயற்குழுக் கூட்டம் அதை தொடர்ந்து கடந்த 18.02.2024 அன்று திருவள்ளுவர் மைதானத்தில் திமுக தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதே நிலையில் தற்போது எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் 2024 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் என இரு விழாவாக இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு திமுகவின் சர்ச்சை பேச்சாளர் என்று அழைக்கப்படும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு தனது கருத்துக்களால் வசை பாட உள்ளார். இவரின் பேச்சைக் கேட்க திமுக கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது ஏனைய கட்சி நிர்வாகிகளும் அதிக அளவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவர் பேச்சுக்கு தனி மவுசு உண்டு கடந்த சில மாதத்திற்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை பற்றி பேசி கட்சியை விட்டு நீக்கிய பின்னர் திமுக தலைமைக்கு மீண்டும் விளக்க கடிதம் கொடுத்த பிறகு கட்சியில் இவரை சேர்த்தனர். அதைத்தொடர்ந்து தற்போது அடக்கி வாசித்து வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இன்று மீண்டும் கரூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேச இருப்பதால் அவர் பேச்சில் உற்று கவனிக்க தமிழக அரசியல்வாதியும் சமூக வலைதள நெட்டிசன்களும் காத்திருக்கின்றனர்.
இன்று நடைபெறும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஏற்பாடுகளை கரூர் மாவட்ட திமுக சார்பாக சிறப்பாக செய்து வருகின்றனர். குறிப்பாக இன்று 80 அடி சாலை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டம் என்பதால் அங்கு தற்போது 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தேவைப்பட்டால் நாற்காலிகள் போடுவதற்காக தேவையான நாற்காலியை கொண்டு வர ஏற்பட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் பிரம்மாண்ட மேடை அமைத்து அதை தொடர்ந்து விழா பந்தலில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரை திமுக கருப்பு, சிவப்பு கொடிகள் பட்டொளி வீசி பறந்து வருகிறது. மேலும் ஆங்காங்கே சுவரொட்டிகளும் ஒட்டி திமுக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
கரூர் மாநகரப் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்ட விழா ஏற்பாடுகளை முன்னிட்டு 80 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.