இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில், இன்று(அக்டோபர் 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக ஆர்ப்பாட்டம்:
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இப்போராட்டத்தில் மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
”டெல்லியில் போராட்டம் நடத்துவோம்”
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நடக்கும் ஆட்சி என்பது நீங்கள் நினைக்கும் எடப்பாடி ஆட்சி அல்ல , தளபதி மு.க ஸ்டாலின் ஆட்சி. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், நீங்கள் மீண்டும் இந்தி திணிப்பை கொண்டு வந்தால் , தளபதி அவர்களின் ஆணை பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம் என பேசினார்.
”அனைத்து மொழிகளும் சமம்”
ஆர்ப்பாட்டம் குறித்து திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., தெரிவிக்கையில், அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த உரிமைப்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சமம். இந்தி திணிப்புக்கு எதிராக, 1965 ஆம் ஆண்டுக்கு முன்பே திமுக போராட்டம் நடத்தியது . மேலும், இந்தி பேசாத மக்கள் விரும்பாத வரை, இந்தி மொழி கட்டாயமாக்கப்படாது என நேரு உறுதியளித்தார்.
”குழு பரிந்துரை”
ஆனால் தற்போது முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலை வந்துவிடும் என தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில், மத்திய அரசின் தொடர்பு மொழியாக இந்தி வந்துவிடும் என தெரிவித்தார்.
இது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது, தமிழ்நாடு மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாத சூழல் உருவாகும். ஏற்கனவே, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து வருகிறோம். இந்நிலையில், ஒரே பொது நுழைவுத்தேர்வு, இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி -மாணவரணி சார்பில், இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என எழிலரசன் தெரிவித்தார்.
இந்நிலையில் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் StopHindiImposition என்ற ஹேஸ்டாக் வைரலாகி வருகிறது.