தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் இசுலாமிய கைதிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், அந்த கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசும்போது, தமிழக முதல்வர் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கூறி, திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமையிலான திமுகவினர் மேடையில் ஏறி மைக்கை பிடிங்கி, நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோ விவகாரம் இருதரப்பிலும் பரபரப்பாக பகிரப்பட்டு வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியதாக நேற்று தகவல் வெளியானது.
திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்ட நிலையில், அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் திருமாவளவன் பேசிய வீடியோவையும் செய்திகளையும் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுகவினர், திருமாவளவன் அப்படி பேசவே இல்லை. அவர் பேசியது இரட்டடிப்பு செய்யப்பட்டு செய்தி வெளியாகியுள்ளது என பதிலுக்கு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில், திருமாவளன் பேசிய என்ன என்பதை அவரது முழு வீடியோவையும் பார்த்து அப்படியே கீழே பதிவு செய்துள்ளோம். கிறிஸ்துமஸ் விழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டம் அருமனைக்கு வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பத்திரிகையாளர்கள் முன் வைத்த கேள்வியும், அதற்கான பதிலும் தொகுக்கப்பட்டுள்ளன. இதுதான் திருமாவளவன் உண்மையில் பேசியது :-
கேள்வி : நாம் தமிழர் கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்துவீர்களா ?
திருமா : அந்த சம்பவம் தவறானது. இதனை திமுக தலைமை அங்கீகரித்த நிலையை பார்க்கவில்லை. அவர்கள் தன்னியல்பாக மேடைகளில் அவதூறு பேசியவர்களை எதிர்த்ததாக அந்த பகுதியை சேர்ந்த திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர். என்றாலும் கூட, கருத்துக்கு கருத்துதான் எடுத்துவைக்க வேண்டும். வன்முறைகள் கூடாது. இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என நான் பெரிதும் நம்புகிறேன்.
கேள்வி : திமுக தலைமைக்கு உடன்பாடு இல்லையென்றாலும், தமிழக அரசு இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா ?
திருமா : எடுக்கனும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
கேள்வி : காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என நீங்கள் வலியுறுத்துவீர்களா ?
திருமா : அததான் சொல்றேன். இந்த மாதிரி அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகள் முன்மொழிகிற நேரத்தில், கருத்துக்கு கருத்தாகதான் அதை அணுகவேண்டுமே தவிர, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என்று திருமாவளன் அந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.