சசிகலாவை அதிமுகவில் இணைப்பதா வேண்டாமா என்பதில் கட்சியின் தலைமைக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஓபிஎஸ்ஸின் பேச்சும், அவர் சொல்லும் கதையும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துகின்றன. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சமீபத்தில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து சென்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சொன்ன கதை பேசுபொருளாகியுள்ளது. அந்தக் கதையில் அவர் திருந்தி வந்தவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என்று கூறியிருந்தார். இது சசிகலாவைத்தான் குறிக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சசிகலா விவகாரம் சமீபத்தில் பேசியபோது, “சசிகலாவின் சரி, தவறுகள் குறித்து எனது தனிப்பட்ட கருத்துகளை கூற விரும்பவில்லை. தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக வலிமையாக இருக்க வேண்டுமானால், சசிகலா அதிமுகவுக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, பாஜகவின் விருப்பமும்கூட.
அதிமுகவில் நல்ல தலைவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு அக்கட்சியில் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் இணைப்பு தொடர்பாக பாஜக முயற்சி செய்கிறதா என்பதை சொல்ல முடியாது. தொண்டர்கள் தங்களுக்கு ஒரு தலைவரை தேர்வு செய்ய முடிவெடுத்தால் அதன்படி நடக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
அவரது இந்தப் பேச்சு அதிமுக தலைமை அலுவலகத்திற்குள்ளும், சசிகலாவின் எதிர் தரப்பினருக்கும் புகைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அண்ணாமலையின் பேச்சு அதிமுகவின் விவகாரங்களுக்குள் பாஜக தலையிடுவதை உறுதி செய்வதாகவும் ஒரு தரப்பினர் கூறினர்.
அண்ணாமலையின் பேச்சு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவுக்கு அண்ணாமலை அட்வைசர் கிடையாது. வேண்டுமானால் சசிகலாவை அண்ணாமலை அவரது கட்சியின் சேர்த்துக்கொள்ளட்டும்" என பேசினார். இதனையடுத்து அதிமுக - பாஜக இடையிலான உறவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக பல்வேறு தரப்பினர் கூறினர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அதிமுக - பாஜகவுக்கு இடையிலான உறவின் உறுதி தொடரும். அதிமுக உறுதியாக இருக்க வேண்டும் என கூறிய கருத்தை ஜோடித்து சித்திரம் வரையப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளின் உள்கட்சி விவகாரம், உள்கட்சி ஜனநாயகத்தில் பாஜக தலையிடுவதில்லை” என கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்