அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். அத்துடன் அடுத்த 4 மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியும் சிறப்பு தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் சில கேள்விகள் எழுப்பட்டுள்ளன. அதாவது, “ தி.மு.க. தீயசக்தி அதை அரசியலிலிருந்து ஒரு அப்புறப்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார். அந்த திமுகவை பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு வந்து, அவரது செயல்பாடுகளின் சிறப்பை பற்றிப் பேசுகிறார். இவை எல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள் எனக் கூறி அதி.மு.க.விலிருந்து பன்னீர் செல்வத்தையும், அவருக்குத் துணையாக இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியாரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது!
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வையும் கலைஞரையும் புகழ்ந்து பேசியதால் அவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கிய பழனிச்சாமி கூட்டம், ஓ.பி.எஸ், மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை?
பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு அவரது ஆட்சியைப் பாராட்டிப் பேசியது தவறு - என்று பேசினீர்களே, அறிக்கைகள் வெளியிட்டீர்களே; பன்னீர் செல்வத்தின் மீதான குற்றச்சாட்டுக்களில், அவரது மகன் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசியதும் ஒன்றல்லவா?
அப்படி இருக்க ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கையில்லை ? அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை ? பழனிச்சாமி கூட்டம் பதிலளிக்குமா ?” எனக் கேள்வி எழுப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் இடையே அதிமுகவின் தலைமை கழகத்தில் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஓபிஎஸ் அதிமுகவின் தலைமை கழகத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அங்கு வந்த வருவாய் அதிகாரிகள் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதிமுகவின் தலைமை கழகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பாக வரும் 25ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்