அ.தி.மு.க. பொதுக்குழு இன்று நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான ஆயிரம் விளக்கு பகுதிசெயலாளரான பாலச்சந்திரன் ( வயது 34), திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சீனிவாசன் ( வயது 40), 171வது வடக்கு வட்ட கழகச்செயலாளர் கார்டன் செந்தில் ( வயது 40) மயிலாப்பூர் பகுதி இணைச்செயலாளர் தினேஷ் ( வயது 36), 113வது வட்ட உறுப்பினர் மார்க்கெட் சுந்தர் ( வயது 33), சேப்பாக்கம் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் ( வயது 38), 120வது கிழக்கு வட்டதுணைச் செயலாளர் முரளிகிருஷ்ணன் (வயது 30), விருகம்பாக்கம் வடக்குபகுதி கழக பொருளாளர் விநாயகமூர்த்தி (வயது 46), விருகம்பாக்கம் 128வது வட்ட அவைத்தலைவர் செல்வம் (வயது 58), திருவல்லிக்கேணி இளைஏஞர் பாசறை துணைச்செயலாளர் லோகேஷ் (வயது 26) கோடம்பாக்கம் 112வது வட்ட மேலவை பிரதிநிதி பாபு, (வயது 62), 112வது வட்ட அவைத்தலைவர் குட்டி (வயது 48), 120வது மேற்கு வட்ட செயலாளர் வின்சென்ட் ராஜ் (வயது 38), 111வது வட்ட கழகச் செயலாளர் சால்னா சேகர் (வயது 52) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


முன்னதாக, வானகரத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமியுடன் கடந்த சில வாரங்களாக கடுமையான மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் நடைபெற்ற மோதலால் அந்த பகுதியே கலவர பூமியாக மாறியது.




இந்த சம்பவத்தின் காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேசமயம், வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதேசமயம் எடப்பாடி பழனிசாமியையும், துணைப்பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள  கே.பி.முனுசாமியையும் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண