திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மறைவையடுத்து, காலியாக இருந்த இடத்தில் திமுகவின் எம்.எம்.அப்துல்லா கடந்த 3-ம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மே மாதம், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுகவின் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் பதவி விலகியதைத் தொடர்ந்து, காலியாக இருக்கும் இந்த இரண்டு இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என் சோமுவின் மகள் கனிமொழி சோமு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் அக்கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான கி.சீனிவாசனிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களைத் தவிர்த்து மற்ற யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாததன் காரணமாக கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றொ தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வுசெய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றது இடைத்தேர்தல் என்பதால் கே.ஆர்.என் ராஜேஷ்குமாருக்கு 2022 வரையும், மருத்துவர் கனிமொழிக்கு 2026 வரைக்கும் பதவிக்காலம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவையில் திமுகவின் பலம் தற்போது 10 ஆக அதிகரித்துள்ளது. மக்களவையில் திமுகவுக்கு 24 எம்.பி.க்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் திமுகவின் பலம் 34 ஆக உயர்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுக்கிறது.
அதேபோல, புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த செல்வ கணபதி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுள்ளார். மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து எம்.பியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.