திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, தினமும் தமிழில் வெளிவரும் நிலையில், திமுக தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் வெளியிடும் பொருட்டு, The Rising Sun என்ற வார இதழ் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளியிடப்பட்டிருக்கிறது.


நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,The Rising Sun வார இதழின் முதற் பதிப்பை பதிப்பாளரும் வெளியிட்டாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட, திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் இதழின் ஆசிரியரான பேரா.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



விழாவில் முதல்வரோடு கலந்துகொண்ட டி.கே.எஸ்.இளங்கோவன்


அத்துடன், The Rising Sun இணையதள பக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில், ’2 முறை கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்ட, வயதான முட்டாள்’ என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்த டி.கே.எஸ்.இளங்கோவனும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினோடு பங்கேற்றதுதான்.


பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும், அவருக்கு பொருளாதார அறிவு இருந்தாலும், அரசியல் அனுபவம் போதுமானதாக இல்லை. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கிறார் என டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதில் கோவமடைந்த பிடிஆர், தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்குறிப்பிட்ட ‘வயதான முட்டாள்’ பதிவை போட்டு, சில மணி நேரங்களில் நீக்கியிருந்தார்.


டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது சரிதான் என்றும், தலைமையின் ஆதரவு இல்லாமல் அவர் இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை எனவும் ஒரு தரப்பு தொடர்ந்து கருத்து பதிவிட்டு வந்த நிலையில், இப்படி நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி பேசியதால் மீண்டும் அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று இன்னொரு தரப்பு கூறி வந்தார்கள்.


இந்நிலையில், நேற்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற The Raising Sun வார இதழ் வெளியீட்டு விழாவில், டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு, இதழின் முதல் பதிப்பையும் பெற்றுக்கொண்டதும் பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.


நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது, அதற்கு நிதி அமைச்சர் காட்டமாக கருத்து பதிவிட்டது எல்லாம் தெரிந்துதான், இந்த வார இதழ் வெளியீட்டு விழாவுக்கு டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டி.கே.எஸ்.இளங்கோவன் மீது திமுக தலைமை அதிருப்தியில் இருந்தாலோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருந்தாலோ மு.க.ஸ்டாலினுடன் அவர் பங்கேற்றிருக்க மாட்டார் எனவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.