தமிழகத்தில் மேலும் ஒரு தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த காவிக்கூட்டம் துடிக்கிறது என்று திமுக ஐடிவிங் செயலாளரும் எம்எல்ஏவுமான டிஆர்பி.ராஜா கூறியுள்ளார்.


கலவரமான போராட்டம்:


கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்திற்கு நியாயம் கேட்கிறேன் என்ற பெயரில் நேற்று தொடங்கிய போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் தனியார் பள்ளி முற்றிலும் சூறையாடப்பட்டதோடு பள்ளிப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறையினரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் பல்வேறு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது.






அதிமுகவினர் கைது:


இந்த கலவரம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் கைது செய்யப்படவில்லை, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சரமாரியாக புகார்கள் எழுந்தன.






ராஜா ட்வீட்:


இந்நிலையில், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எம்எல்ஏவும் திமுக ஐடி விங் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, “குற்றம் சாட்டப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த துயரமான சம்பவத்தில் கூட கேவலமான அரசியல் ஆதாயம் தேடியிருக்கும் கயவர்கள் மீதும் "நடவடிக்கைகள்" தேவை ! அனைத்து குற்றவாளிகளும் நிச்சயம் சட்டபடி தண்டிக்கப்படுவார்கள்.” என்று கூறியுள்ளார்.






”மேலும் ஒரு தூத்துக்குடி சூழல்”


மேலும், “சம்பவம் நடந்த அன்றே காவல் துறையினர் அவர்களது பணியை துவங்கியுள்ளனர். அமைச்சர் கணேசன் அவர்களும் உயர் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரித்தனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமிழகத்தில் மேலும் ஒரு தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த காவிக்கூட்டம் துடிக்கிறது.” என்று குற்றம்சாட்டியுள்ளார். ”பள்ளி நிர்வாகம், சம்பவத்தை சமூக வலைதளங்களில் தூண்டிவிட்டு கலவரச் சூழலை உருவாக்கியவர்கள், இதை காரணமாக சொல்லி தமிழகம் எங்கும் பள்ளிகள் இயங்காமல் இருக்கும் சூழலை உருவாக்க முயன்ற தற்குறிகள் என்று அனைவருமே சங்கி மந்திகள் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன.”






”மாணவிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்:”


“இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் எதையும் தீர விசாரிக்காமல் பதிவிடுவதை தவிர்க்குமாறு விங்கிற்கு  அறிவுறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவசரகதியில் பதிவிடக்கூடாது என உடன்பிறப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எதிரி எதிர்பார்த்தது "இரண்டாம் தூத்துக்குடி" இதில் யாருக்கும் சந்தேகமில்லை..” என்று டிஆர்பிராஜா கூறியுள்ளார்.


இறுதியாக “நியாயமான விசாரணை நடைபெறும். மாணவியின் குடும்பத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். இந்த சம்பவத்தில் அரசியல் லாபத்திற்காக கீழ்தரமான செயல்களை செய்திருக்கும் அரசியல் சாக்கடைகளுக்கு மக்கள் பாடம் கற்பிப்பது உறுதி. நிலைமையை தடம் பிறழாமல் மிக ஜாக்கிரதையாக கையாண்ட முதல்வருக்கு நன்றிகள்" என்று கூறியுள்ள டி.ஆர்.பி.ராஜா, "சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் போடப்பட்ட அனைத்து பதிவுகளையும் திமுக ஐடி விங் தொடர்ந்து பதிவிறக்கி வருகிறது. அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும். கலவரத்தை தூண்டிய அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும்” என்று டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.