குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநில கட்சிகளின் ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில் நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதற்காக நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 776 மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள், 4,120 அனைத்து மாநில, யூனியன் பிரதேச எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்கின்றனர். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பிக்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படுகிறது.
இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து நேரடியாக வீட்டுக்கு செல்லாமல் தலைமைச் செயலகம் சென்ற அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்