திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து மதிமுக தரப்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோட்டி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்பூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ், "திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரண்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க திமுகவிடம் கேட்டுள்ளோம் என்றார். மேலும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி சின்னத்தில்தான் கண்டிப்பாக போட்டியிடுவோம். மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. இது குறித்து திமுக குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.
தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே 3 கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும், தனி சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். அதன்படி மதிமுக தரப்பில் கோரப்படும் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் இன்று மதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.