சேலம் விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துரையாடல் மேற்கொண்டார். அப்போது விமான நிலைய விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசிடம் தங்களது எதிர்பார்ப்பு குறித்தும் அப்பகுதியில் வசிக்கும் 4 கிராம மக்கள் ஜி.கே.வாசனிடம் விளக்கி பேசினர். பின்னர் கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகள் மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என உறுதியளித்தார். 


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், "விமான நிலைய விரிவாக்கத்திற்காக சில அதிகாரிகள் மக்களை மிரட்டுவது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே உள்ள மாற்று இடத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்கிற இப்பகுதி மக்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார். மேலும் நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு மோடி தலைமையிலான அரசு செயல்படுவதாகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது அக்கறை கொண்ட அரசாகவும் மத்திய அரசு உள்ளதாக தெரிவித்தார்.



அப்போது பிரதமரின் தொடர் வருகை குறித்து எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த ஜி.கே.வாசன், பாரத பிரதமர் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்ந்து சென்று, மாநிலத்தில் எந்த ஆட்சி இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்டங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார். ஆனால் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டான ஆட்சியாகவும், கட்சியாகவும் திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது.


இதனால் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் திமுக அரசுக்கு எதிர்மறையான வாக்குகள் அதிகரித்து கொண்டிருப்பதாகவும், பிரதமரின் வருகை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொருப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்று பேசுவதை ஏற்க முடியாது என்ற அவர், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்த காவல்துறைக்கு ஆட்சியாளர்கள் முழு சுதந்திரத்தை வழங்கவில்லை என குற்றம் சாட்டியதோடு, இதை தமிழ்நாடு அரசு இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.


மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர் நிச்சயம் இந்த தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.