தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு எப்போதும் துரோகம் செய்யும் கட்சி தான் திமுக என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:


அதிமுகவில் உள்ள ஒரு தொண்டன் கூட மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணுகிறான். ஆனால் இங்குள்ள கட்சிகாரர்களின் உழைப்பால் இப்பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்எல்ஏவாகி, அமைச்சராகி, எம்பியாகி வந்தீர்களே, அந்த எண்ணம் கூட உங்களுக்கு இல்லையா. உங்களை நம்பித்தானே இங்குள்ளவர்கள் இருந்தார்கள்.


20 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்களே, இந்த மாவட்ட மக்களுக்கு ஏதாவது செய்தீர்களா. இதிலிருந்து வைத்திலிங்கம் எப்படி பட்டவர் என நீங்கள் எண்ணி்ப்பார்க்க வேண்டும். இங்குள்ள அமைச்சர்கள், கட்சியினர் எல்லாம் தங்களது பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்து கொடுங்கள் என கேட்பதுண்டு. ஆனால் வைத்திலிங்கம் எதுவும் கேட்கமாட்டார். யாருக்கும் எதுவும் செய்யமாட்டார். இப்படி பட்டவரை நான் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது.


திருச்சியில் ஒரு பொதுகூட்டத்தை கூட்டி வைத்திலிங்கமும், ஒ.பன்னீர்செல்வமும் என்னை கடைசி வரை திட்டியது தான் மிச்சம். ஆனால் நான் உங்களைப் போன்று அடிமட்டத்திலிருந்து வந்தவன். வைத்திலிங்கம் போன்று அதிகாரம் பிடித்து அலையவில்லை. ஓராயிரம் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் சரி, அதிமுகவில் துரோகிகளுக்கு இடமில்லை.
ஜெயலலிதா சட்டமன்றத்தில் முன்பு கூறினார்.  எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறாண்டுகள் இருக்கும் என்று. அவர் மறைவுக்குபிறகு எவ்வளவு சோதனைகளை நாம் சந்தித்தோம். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கத்தின் வஞ்சகமும் நாடகமும் பலிக்காது. டிடிவி.தினகரன், ஜெயலலிதாவால் 10 ஆண்டு காலம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர். இன்றைக்கு நிலைமை என்ன, யார் துரோகி என கூறினார்களோ, இப்போது இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர்.


தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்தே உள்ளது. அதே போல் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0 என ஓ போட்டுக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் கஞ்சா புழக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


திருமண மண்டபம், மால்களில், விளையாட்டு அரங்குகளில் மதுவை அறிமுகப்படுத்தி எல்லோரையும் குடிகாரர்களாக ஆக்கி வருகிறார்கள். இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக்க வேண்டும். தமிழகத்தில் கொலைகளின் எண்ணை 2021 ம் ஆண்டில் 1597 எனவும், 2022,2023 என எல்லா ஆண்டுகளிலும் 1597 என கூறி, கொலைகளின் எண்ணிக்கையிலும் இந்த திமுக அரசு மோசடியில் ஈடுபட்டு வருகிறது.


தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டன உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கம்பி, சிமெண்ட் என கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டாவில் திமுக ஆட்சி காலத்தில் தான் மீத்தேன், ஈத்தேன் எடுக்க அனுமதி வழங்கி, விவசாயிகளின் நிலங்களை  பாலைவனமாக்க முயன்றது. ஆனால் அதிமுக அரசு விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசிடம் வாதாடி, போராடி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, விவசாயிகளை பாதுகாத்தது. திமுக எப்போதும் விவசாயிகளுக்கு துரோம் செய்து தான் வருகிறது. இதனை இப்பகுதி விவசாயிகள் உணர வேண்டும்.


அதிமுக கட்சி தற்போது புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்றார்.