சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட இருப்பாளி பகுதியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் நடைபெற்றது. இதில் இருப்பாளி, சித்தூர், பூலாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி, ஆடையூர், பக்கநாடு உள்ளிட்ட பகுதியில் இருந்து திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 1,500 பேர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
விவசாயிகள் கோரிக்கை:
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஏழையாகவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் கிடைக்காமல் தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் குடிநீர், சாலை, மருத்துவம், கல்வி, வேளாண்மைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த அரசாங்கம் என்றால் அது அதிமுக அரசாங்கம் மட்டும்தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.
திமுக திராவிடமாடல் ஆட்சி என்றும், விடியல் பிறக்கும் என்று கூறினார்கள். ஆனால் அதிமுகவால் விடியல் பிறப்பதற்காக போடப்பட்ட திட்டத்தை முடக்கி, விடியாமல் திமுக அரசாங்கம் பார்த்துக் கொண்டது. குறிப்பாக மேட்டூர் அணை நிரம்பும்போது, நீரேற்று திட்டத்தின் மூலம், ஏரிகளை நிரப்பும் திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுவிட்டனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே வேளாண் பெருமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன் என்றும் பேசினார்.
இரட்டை வேடம்:
தமிழகத்தில் அரசியல் பழிவாங்கும் கட்சி என்றால், திமுக கட்சியும், திமுக ஆட்சியும் என்பதுதான். ஒரு குடும்பத்தால் இத்தனை மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். திமுக குடும்பம் சர்வாதிகார ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மக்களுக்கு எந்த திட்டங்கள் கிடைக்கப் பெறவில்லை, திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்த 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு.
இரட்டைவேடம் போடுகின்ற கட்சி என்றால் அது திமுக மட்டும் தான் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, திமுகவின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சி 58 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நடைபெற்று உள்ளது. திமுக அரசாங்கம் மக்கள் விரோத ஊழல் அரசாங்கமாக செயல்பட்டு வருகிறது. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசியாக இருக்கும் ஒருவர், அமைச்சராக எவ்வாறு தொடர்நது இருக்கமுடியும், அவருக்கு முதல்வர் ஆதரவாக உள்ளார்.
செந்தில் பாலாஜி விவகாரம்:
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. திமுக அரசாங்கம் வழக்கு இருந்தால் அமைச்சராக தொடரலாம் என்று கூறுகிறது. வழக்கு இருந்தால் அமைச்சராக தொடலாம் அதில் தடையில்லை, ஆனால் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ஒருவர் எவ்வாறு அமைச்சராக தொடரமுடியும் என்று கேள்வி எழுப்பினார். சிறைவாசி ஒருவர் எவ்வாறு அமைச்சராக தொடரமுடியும் என்பது தான் மக்களுடைய கேள்வியாக உள்ளது.
இனியாவது முதல்வர் விழித்துக்கொண்டு மக்கள் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி விடுவித்தால் நாட்டு மக்கள் பாராட்டுவார்கள். இல்லாவிட்டால் வருகின்ற தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து விடுவித்தால், ஏதாவது வாக்குமூலம் கொடுத்தால், அதன்மூலம் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் இன்று வரை அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கவில்லை என்று நாட்டு மக்கள் பேசிக் கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.