தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று தமிழக முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கண்டன உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தின் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இப்போது தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர் இருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழக அரசின் குடும்ப ஆட்சி காரணமாக மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகியவை தான் இந்த ஆட்சியில் இருந்து வருகிறது. திராவிடம் மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
செங்கல்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, செங்கல்பட்டு தலைமை இடமான கொண்டு மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக அரசு. பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு கழித்து அதிமுக அரசுதான் தடுப்பணைகள் கட்டியிருந்தது. ஒரு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றால் சுமார் 200 கோடி அளவிற்கு செலவாகும், ஆனாலும் வளர்ச்சிக்காக மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு அதிமுக, மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகம் ஆகிய பணிகள் 90% முடிந்துள்ளன என பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம், கொலவாய் ஏரி 60 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல மதுராந்தகம் ஏரிக்கு 120 கோடி மதிப்பீட்டில் தூர் வாருவதற்கு அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு. தமிழக முழுவதும் குடிமராமத்து பணியில், 6000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது என பேசினார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த உடன் முதல் போனஸ் ஆக சொத்துவரி உயர்த்தப்பட்டது. இப்பொழுது மக்களுக்கு இரண்டாவது போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் மின்கட்டண உயர்வு. பொங்கல் என்றாலே திராவிட மாடல் ஆட்சி தான் நினைவுக்கு வருகிறது. திமுக பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளம் தரமற்ற முறையில் இருந்தது, கடுகு பதில் இலவம் பஞ்சு விதைகள் கொடுத்திருந்தார்கள். அரிசியில் வண்டு என பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்திருந்தனர் என பேசினார்.
சமீபத்தில் செய்தியாளரை சந்தித்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர் பேசுகையில், நீட் தற்கொலைக்கு அதிமுக அரசுதான் காரணம் என பேசி இருந்தாரர். இது முற்றிலும் தவறு. காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் அரசு ஆட்சி செய்த பொழுதுதான், 2010 ஆம் ஆண்டு நீட் குறித்த அறிவிப்பு வெளியிட்டது. அப்பொழுது திமுக எதிர்க்காமல் இருந்தது. அப்பொழுது, அதிமுகவின் பொது செயலாளர் ஆக இருந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆரம்ப முதலே நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக இருந்து வருகிறது, என பேசினார்.
தற்பொழுது போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது, தமிழக அமைச்சர் தற்போது செய்தியாளர்களை சந்தித்த பொழுது வெளிமாநிலங்களில், இருந்து தான் கஞ்சா தமிழ்நாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர். காவல்துறை மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் திமுக அரசு தான் இதை தடுக்க வேண்டும், ஆனால் அவர்கள் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் விற்பனை செய்கிறார்கள் என அவர்களே தெரிவிக்கின்றனர், அதில் 146 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை விற்பதே அவர்கள் தான், வேலியே பெயரை மேய்ந்த கதையாக உள்ளது. காவல்துறைக்கு கஞ்சா விற்பவர்கள் யார் என தெரிகிறது, ஆனால் அவர்களை கைது செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது, ஆனால் ஆன்லைன் ரம்மி வியாபாரிகள் இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், அப்பொழுது திமுக ஆட்சி அமைந்தது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதற்கு முறையான ஆவணங்கள் மற்றும் காரணங்களை முன்வைக்காத காரணத்தினாலே ஆன்லைன் ரம்மி தடையை நீதிமன்றம் ரத்து செய்தது.
அதிமுகவிற்கு எதிராக அறிக்கை விட்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி மேடையிலேயே கடுமையாக விமர்சனம் செய்தார். இது குறித்து பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அவர்களே விமர்சித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று சட்டமன்ற உறுப்பினராகி யானையின் மீது சென்றார். அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்றார். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை தயவு செய்து குறை கூறாமல் இருங்கள், இல்லையென்றால் சென்றுவிடுங்கள் , நீங்கள் கட்சியின் கிளை செயலாளராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் ,என கடுமையான விமர்சனத்தை எடப்பாடி பழனிசாமி முன் வைத்தார். இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.