செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சூர் பகுதியில், ஒன்றிய அவைத் தலைவர் அஞ்சூர் தேவராஜ் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் இ.சம்பத்குமார் ஆகியோர் ஏற்பாட்டில், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே. எம். சின்னையா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மகளிர் அணி இணைச் செயலாளருமான கணிதா சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட துணைச் செயலாளருமான தன்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளர் முக்கூர் சுப்பிரமணியன் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பேசியதாவது: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக என்ற கட்சியின் தோன்றி ஆட்சிக்கு வந்தவுடன் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர் வெற்றியை பெற்றார். அவர் வழியில் அரசு தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது.
நாடகம் நடத்தும் திமுக
சொன்ன திட்டங்கள் மட்டுமில்லாமல் சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி காட்டியது அதிமுக அரசு, தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன், என்று சொல்லிவிட்டு ஒரு சிலருக்கு தந்தவர்கள், பெரும்பான்மையான பெண்களை வஞ்சித்துள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றனர். ஆனால் தற்போது அது முடியாது என்று அவர்களுக்கே தெரிந்து விட்டது . அதனால் மக்களிடம் கையெழுத்து பெறுகிறேன் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்று வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளி மாணவர்களையும் கருத்தில் கொண்டு 7.5% இட ஒதுக்கிடை அளித்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்கியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு , பிறகு அவர்கள் வழியில் எடப்பாடியார் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், என வாரிசுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். கனிமொழி , தயாநிதி மாறன் போன்றவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
திமுக குடும்ப கட்சி
குடும்பக் கட்சியாக திமுக உள்ள நிலையில், ஜனநாயக முறையில் செயல்படும் கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளது. தொண்டனும் தலைவனாக கூடிய இயக்கம் நமது இயக்கம் ஆகும். எதையுமே செய்யாத திமுக அரசு விளம்பரம் செய்து பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக. அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மக்களிடத்தில் கழகத்தினர் கொண்டு சேர்க்க வேண்டும் வரும் சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்வில் இலக்கிய அணி துணைச் செயலாளர் எ.எஸ்.மலர்மன்னன், மாவட்ட அவைத் தலைவர் எ.எம் பொன்னுசாமி, மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம்.ஜி.கே கோபி கண்ணன்,ஒன்றிய செயலாளர்கள் கஜா என்கிற கஜேந்திரன், சி.ஆர்.குணசேகரன், நகன செயலாளர் டி. சீனிவாசன், .செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சல் குரு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.