தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் இந்த சூழலில் கட்சி அமைப்பிலும் அதிரடி மாற்றத்தை செய்ய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தயாராகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராகும் திமுக


வரும் 2026 சட்ட மன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் விதமாகவும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுத்திருப்பது போல, கட்சியிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் கட்சி கட்டமைப்பை மாற்றி அமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்புவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாவட்ட செயலாளர்களுக்கு செக் வைக்கும் வகையில் இந்த கட்டமைப்பு மாற்றம் இருக்கும் என்பதால் திமுக மாவட்ட செயலாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.


திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றமா ?


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து கட்சியையும் ஆட்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு வரும் நிலையில், பல மாவட்ட செயலாளர்கள் சீனியர்களாகவும், மாவட்டத்தில் தாங்கள் எடுக்கு முடிவையே தலைமை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொனியிலும் செயல்பட்டு வருவதாக புகார்கள் அறிவாலயத்திற்கு வந்துள்ளன. இது குறித்து உதயநிதி ஸ்டாலினின் கவனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தலைமை நிலைய செயலாளர் கொண்டுச் சென்ற நிலையில், குறு நில மன்னர்போல் செயல்படும் மாவட்ட செயலாளர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கட்டுப்படுத்தும் செயலாளர்கள், மற்ற நிர்வாகிகளை மதிக்காமல், தொண்டர்களுக்கு எதுவும் செய்துகொடுக்காத செயலாளர்கள் என புகார்களை வரிச்சைப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மாவட்ட செயலாளர்கள் பொறுப்பிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் உதயநிதி ஸ்டாலினிடம் வைத்துள்ளதாகவும் சொல்லப்படும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக உயர்வு ? 72க்கு பதில் இனி 117?


திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ள நிலையில், அதில் பலர் அமைச்சர்களாவும் உள்ளனர். அதனால், அவர்களது முடிவுகள் தவறாகவே இருந்தாலும் யாரும் எதிர்ப்பு சொல்ல முடியாத நிலை, சில மாவட்டங்களில் நிலவுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு மாவட்ட செயலர் வசம் அதிகப்பட்சம் 6 சட்டமன்ற தொகுதிகள் வரும் நிலையில், நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் எழுந்து வருகின்றன. எனவே அவற்றையெல்லாம் களையும் விதமாகவும் கட்சி கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


அதிக சட்டமன்ற தொகுதிகளை வைத்துள்ள மாவட்ட செயலாளர்களின் அதிகாரங்களை குறைக்கும் விதமாக ஒரு மாவட்ட செயலாளருக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் என்ற அளவில் மாவட்டங்களில் எண்ணிக்கையையும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  எனவே தற்போது இருக்கும் 72 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட அமைப்பு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.


தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என மொத்தம் 117 புதிய மாவட்டங்களை உருவாக்க திமுக தலைமை முடிவு எடுத்திருப்பதாகவும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பொதுச்செயலாளர் துரைமுருகன் அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.