நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் முக்கிய பிரமுகரான டேனியல் ஆபிரஹாம் இல்ல திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் சந்திக்கும் போது கூறியதாவது: இந்திய உபகண்டத்தில் பல்வேறு மத நம்பிக்கைகள், பல்வேறு சம்பிரதாயங்கள், பல்வேறு மரபுகள், பல்வேறு மொழிகள் என இருக்கின்றன. இவை அனைத்தையும் புல்டோசர் போட்டு நசுக்குவதை போல் நசுக்கி விட்டு சனாதன சக்திகள் இந்துத்துவா கொள்கையை மட்டும் நிலை நாட்ட வேண்டும் என்று பாஜகவும், ஆர் எஸ் எஸ் அமைப்புகளும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலைமை ஏற்படுமானால் இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து சிதறி போகும். அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். அப்போது தான் சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைத்து நிற்கும். சகோதரத்துவம் வளர்ந்தால் தான் நாட்டில் ஒற்றுமை நிலைபெறும்.
தமிழகத்தில் ஒவ்வொரு மதம் சார்ந்த மக்களும், அவரவர் விருப்பப்படி சடங்குகளை நிகழ்த்தி திருமணங்களை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமையை குலைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கொள்கை பின்பற்றி நடைபெறுகிறது. இதை எதிர்த்துப் போராடுகின்ற பெரு சக்தியாக தமிழ்நாடு திகழ்கின்றது. தமிழகத்தில் குறிப்பாக திராவிட மாடல் ஆட்சி நடத்திகின்ற ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஒற்றுமையை ஒருமைபாட்டை நிலை நாட்டுவதற்கு அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்து இயங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவின் மத நம்பிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டி மாநிலமாக செயல்படுகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் என சொல்லும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் கருத்து பட்டப் பகலில் காண்கின்ற கனவு ! தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது. தமிழ்நாட்டில் அவர்கள் காலூன்ற முடியாது என்றார். மேலும் பேசிய அவர், 2024 ல் திமுக தலைமையிலான இதே கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும். பெரியார் தொடங்கி பல்வேறு தமிழ் அறிஞர்கள் வளர்த்த இந்த திராவிட இயக்க மண்ணில் பாஜகவின் கொள்கைகள் ஊடுருவ முடியாது. சேது சமுத்திர திட்டம் தேவை என்பதை பேரறிஞர் அண்ணாவே சொன்னார். அதற்காக நான் கடுமையாக போராடியிருக்கிறேன். அந்த திட்டம் அவசியம். அது தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்கும், தென்னாட்டு வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டம் வழிவகுக்கும். தென் தமிழகத்திற்கு மிகவும் பயனுறுத்திட்டமான செண்பகவல்லி அணைை சீரமைப்பு குறித்து மூன்று முறை கேரள மாநில முதலமைச்சரை சந்தித்தேன். அவர்கள் அதிலுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டாலும் கூட அதை செயல்படுத்த வராமல் இருக்கிறார்கள். அது வருந்தத்தக்கது. அந்த நிலை மாற வேண்டும். கேரள அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்" என தெரிவித்தார்.