DMK Members Joined TVK: வேலூர் மாவட்டத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்டவர்கள் , விஜய்யின் தவெக கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், எதையும் கூலாக எடுத்துக் கொள்ளும் அமைச்சர் துரைமுருகன் காட்டமாக பேசியுள்ளார்.
திமுக கூட்டம்:
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது,காட்பாடியில் கடந்த தேர்தலின் போது, கொஞ்சம் ஏமாந்து விட்டேன் , ஆனால் இந்த முறை நடக்க விடமாட்டேன். என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன் என பேசியுள்ளார்.
தவெகவில் இணைந்த திமுகவினர்:
வேலூர் மாவட்டத்தில், திமுகவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தவெகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக வேலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் வேல்முருகன் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
’மன்னிக்க மாட்டேன்”
திராவிட முன்னேற்றக் கழகம் ராஜா குப்பம் ஊராட்சியில் நிலவும் கட்சி அதிருப்தி காரணமாக திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் , இன்று நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் பேசிய துரைமுருகன், கட்சி துரோகிகளை மன்னிக்க மாட்டேன் என பேசியுள்ளது, தவெகவில் சிலர் இணைந்ததை குறிப்பிட்டுதான் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கோபத்தில் துரைமுருகன்:
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலானது நடைபெறவுள்ள நிலையில், இப்போதே தேர்தல் வேலைகளை திமுக கட்சியானது தொடங்கி விட்டதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் , விஜய்யின் தவெக கட்சி வரவானது , அனைத்து கட்சியினராலும் உற்றுநோக்கி பார்க்கப்படுகிறது. விஜய்க்கான ரசிகர் பலம், எதிர்க்கட்சி வலுவற்ற தன்மை, விஜய்க்க்கு சாதகமான போக்காகவே பார்க்கப்படுகிறது.
மேலும் , அடுத்தகட்ட கட்சி பணிகளிலும் , விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் வெளியாகியுள்ளது. ஆனாலும் , எதிர்க்கட்சிகள் பிரிந்தும் , முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் உட்கட்சி பூசலும் , திமுகவுக்கு சாதகமாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த தருணத்தில் , வேலூர் திமுகவின் முகமாக பார்க்கப்படும் மூத்த தலைவரான துரைமுருகன் பகுதியிலிருந்து, சிலர் தவெக பக்கம் சாய்ந்ததாக தகவல், அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.