திமுக பொதுக்குழு வரும் 9-ஆம் தேதி (நாளை மறுநாள்) சென்னை, அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இந்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தி.மு.க. நிர்வாகிகள் பலரும் காலை முதல் அண்ணா அறிவாலயத்தில் குவிந்து தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் விருப்பமனுத் தாக்கல் செய்து வந்தனர். இந்த நிலையில், சற்றுமுன் அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.






அவருடன் சேர்ந்து துரைமுருகனும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஏற்கனவே ஒன்றிய, நகர, மாநகர, மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்த அடிப்படையில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக நாளை மறுநாள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  மேலும், வரும் 9-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய துணைப் பொதுச்செயாலளராக மக்களவை உறுப்பினர் கனிமொழி நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சுப்புலட்சுமி ஜெகதீசன் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகியதுடனும், அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.




இதனால், அவரது பதவியிடம் மற்றொரு பெண் நிர்வாகிக்கு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கனிமொழி துணைப்பொதுச்செயலாளராக தேர்வாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கமாக, தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தான் நடைபெறும். ஆனால், இந்த முறை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : தமிழர்களிடையே வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தந்த இந்திய அரசின் செயல்...அன்புமணி ராமதாஸ் காட்டம்


மேலும் படிக்க : அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் 100% ஒன்றிணைப்பதற்கு வாய்ப்பே இல்லை - இபிஎஸ்