மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் காரை பாஜகவினர் வழி மறித்து காலணி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 


ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றார். 


அப்போது பாஜகவினரும் அஞ்சலி செலுத்த வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் செலுத்திய பிறகு பாஜக கட்சியினர் செலுத்துமாறு, அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிடிஆர் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது, அவரது காரில் பாஜகவினர் காலணி வீசி தாக்கினர்.


உடனே அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பாஜகவினரை அப்புறப்படுத்தியதையடுத்து அமைச்சர், அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றது. இச்சூழலில், பிடிஆரின் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்டதற்கு திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தளபதி வெளியிட்ட அறிக்கையில், "இந்திய திருநாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமானநிலையத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் வழியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்ட பாஜக குண்டர்களின் அநாகரிகமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.


இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுமானால் திராவிட முன்னேற்ற கழகம் தடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கையில் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, பாஜக சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜக தலைவர்களை அங்கு வந்த தமிழ்நாடு  நிதித்துறை அமைச்சர் பிடிஆர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.


மரியாதை குறைவாகவும் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அலுவலர்களை பார்த்து "இந்த பரதேசி பயலுகளுக்கு என்ன தகுதி உள்ளது? யார் இவன்களை உள்ளே எனக் கூறி திட்டினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


திமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான பிடிஆர் கார் மீதே பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் இருக்கட்சிகளுக்கிடையே பெரும் பதற்றத்தை தூண்டலாம் எனக் கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண