அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ‘யார் அந்த Sir?” என்ற பேட்ஜ் அணிந்து இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு சென்ற நிலையில், யார் அந்த கோடநாடு Sir? என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பு கேள்வி எழுப்பியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் நமது அம்மா நாளேட்டின் ஆசிரியருமான மருது அழகுராஜ்.


மருது அழகுராஜ் யாரை சொல்கிறார் ?


இது குறித்து மருது அழுகுராஜை தொடர்புகொண்டு பேசியபோது, ‘கோடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்கப்பட்டு, அது தொடர்பாக 5 மரணங்கள் நிகழ்ந்து கிட்டத்தட்ட 8ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்றபோது காவல்துறையை உள்துறையை கையில் வைத்திருந்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். ஜெயலலிதா இல்லத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்த நிலையில், அவர் ஏன் நேரடியாக அங்கு சென்று என்ன நடந்தது என்று பார்க்கவில்லை ?


அதோடு, முறையான விசாரணை நடத்தவில்லை, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எந்த உதவியும் அவர் செய்யவில்லை அதற்கு மாறாக தன்னுடைய ஆட்சி காலத்திலேயே அந்த வழக்கை விரைந்து முடிக்கவே அவர் முயற்சித்தார்.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒருநாளாவது தான் தெய்வமாக நினைப்பதாக சொல்லும் ஜெயலலிதா இல்லத்தில் நடைபெற்ற கொள்ளை, மரணங்கள் குறித்து திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருப்பாரா? 90 நாட்களில் குற்றவாளியை கண்டுபிடிப்போம் என்று திமுக வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதை நிறைவேற்றினீர்களா? என்று கேட்க அவருக்கு துணிச்சல் இருந்ததா ? குறைந்தது அவரது ஆதரவாளர்களை வைத்து வானகரத்தில் ஒரு பொதுக்குழுவை நடத்தினாரே, அந்த கூட்டத் தீர்மானத்திலாவாது கொடாநாடு விவகாரம் தொடர்பாகவும் கொலையாளிகளை குற்றவாளிகளை திமுக அரசு ஏன் தண்டிக்கவில்லை என்று ஒரு தீர்மானமாவது போடப்பட்டதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார் மருது அழகுராஜ்.


 


மலிவான அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி


மேலும், ‘மாணவி பாலியல் வன்கொடுமையில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தபோதும் நீதிமன்ற மேற்பார்வையிலேயே 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையிலும் மால்களில் யார் அந்த சார் ? என்ற பாதாகையை வைத்துக்கொண்டு மலிவான அரசியலை அதிமுக என்ற பெயரை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி செய்கிறார்.


சட்டமன்றத்திற்கு யார் அந்த சார்? என்ற பேட்ஜ் குத்திக்கொண்டு செல்லும் எடப்பாடி பழனிசாமி, கோடநாட்டில் உள்ள 26 சிசிடிவிக்களை அணைத்தது யார் என்றும் அந்த சிசிடிவிக்களை கையாண்ட இளைஞர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாகவும் ஒரு கேள்வியும் எழுப்பாதது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி’ என்றார்.


எடப்பாடியோடு இருந்தப்போதும் நான் இதை பேசினேன்


அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டு நமது அம்மா நாளேட்டின் ஆசிரியராக பணியாற்றியப்போது ஏன் இந்த கேள்வியை நீங்கள் எழுப்பவில்லை ? என்ற கேள்விக்கு பதிலளித்த மருது அழகுராஜ் ‘உண்மையை எப்போது வேண்டுமனாலும் பேசலாம். உள்ளே இருக்கும்போதும் நான் இதை பேசினேன். ஆனால், நமது அம்மாவில் இது பற்றி எழுத என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. வெளியில் வந்து பேசியபோது என்னையே விசாரணைக்கு அழைத்து காவல்துறை விசாரித்தார்கள்’ என்று குறிப்பிட்டுள்ள மருது அழகுராஜ்


திமுக-வின் ‘பி’ டீம் எடப்பாடி பழனிசாமி


எடப்பாடி பழனிசாமியை திமுக இயக்குகிறது என்றும் திமுகவின் ‘பி’ டீமாகவே அவர் செயல்படுகிறார் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதனால்தான், அவரை இதுவரை நேரடியாக காவல்துறை அழைத்து விசாரிக்கவில்லை என்றும் மருது அழகுராஜ் திமுக அரசை நோக்கி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.